கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை; பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளிப்பு

கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை; பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளிப்பு-Sri Lankan Killed in Pakistan-Imran Khan-Gotabaya Rajapaksa
பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம் செய்த போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம்... .

- இதுவரை 113 பேர் பாகிஸ்தானில் கைது
- நியாயம் கிடைக்கும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை, இயன்றளவு உறுதி செய்யப்படும்
- இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது

பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்துகொண்டிருந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

இச்செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும், பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாகப் பாகிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர் என்றும் ஜனாதிபதியிடம் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையர் கொடூர கொலை; காரணமான அனைவருக்கும் தண்டனை-Pakistan Mob Killed Sri Lankan-Priyantha Diyawadana

குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.