நுரைச்சோலை வழமைக்கு வரும் வரை 4 நாட்களுக்கு இரவில் ஒரு மணி நேர மின் வெட்டு

நுரைச்சோலை வழமைக்கு வரும் வரை 4 நாட்களுக்கு இரவில் ஒரு மணி நேர மின் வெட்டு-Norochcholai Power Plant

காரணம் என்ன?

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை, நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 3 - 4 நாட்களுக்கு பி.ப.  6.00 மணி - பி.ப. 9.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள 3 மின் உற்பத்தி கட்டமைப்புகளிலிருந்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் 900 MW மின்சக்தி விநியோகமும் வழமை போன்று இடம்பெறும் வரை இவ்வாறு மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
நாட்டில் ஏற்பட்ட மின்சார்த் தடையைத் தொடர்ந்து, அதிக மின் வளங்கலை பெறும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் சுமார் 300 இலிருந்து 500 செல்சியஸ் வரை சூடாகிய நிலையில், அதன் இயக்கத்தை சீராக பராமரிக்கும் தன்னியக்க குளிர்விக்கும் தொகுதியின் இயக்கம் தன்னியக்க முறையில் தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது.

குறித்த தொகுதி படிப்படியாக குளிர்வடைந்த பின்னரே, அதன் இயக்கம் வளமைக்கு திரும்பும் என்பதோடு, இதற்கு 3 - 4 நாட்கள் வரை எடுக்கும் என்பதால், அதனை ஈடு செய்ய இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய கட்டமைப்புக்கு வழங்கப்படும் சுமார் 900 மெகா வாற் மின்வலு தற்போது கிடைக்காத நிலையில், அதியுச்ச மின்சார பாவனைக் காலமான பிற்பகல் 6.00 மணி முதல் 9.00 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் நாட்டின் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மு.ப. 11.30 மணியிலிருந்து பல மணி நேரத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இவ்வாறு தடைப்பட்டிருந்த மின்சாரம் காரணமாக நீர் விநியோக நடவடிக்கை பாதிப்பு மற்றும் புகையிரத சமிக்ஞை காரணமான தாமத நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மின் விநியோகம் கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டுவரப்பட்டதோடு, நீர் விநியோகம், புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.