பாதுகாப்பு இல்லையென பாராளுமன்றிலிருந்து ஐ.ம.ச. எம்.பிக்கள் வெளிநடப்பு

பாதுகாப்பு இல்லையென பாராளுமன்றிலிருந்து ஐ.ம.ச. எம்.பிக்கள் வெளிநடப்பு-SJB Boycott Parliament

- தமிழ் எம்.பிக்களுக்கு உரையாற்ற அதிக வாய்ப்பு

ஐக்கியமக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளும் தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து எதிரணி எம்.பிகள்  இன்று பிற்பகல் (04) சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் தொழில் அமைச்சுகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.  மனுஷ நாணயக்கார எம்.பியின் உரையின் போது நேற்றும் சர்ச்சை ஏற்பட்டதோடு இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் மனுஷ நாணயக்கார எம்.பியும் கடுமையான வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டனர். மனுஷ நாணயக்கார உரையாற்றிய பின்னர் சபையில் இருந்து வெளியில் சென்றதோடு சபைக்கு வெளியில் வைத்து அவரை ஆளும் தரப்பு எம்.பிகள் தாக்க முற்பட்டதாக எதிரணி குற்றஞ் சாட்டியது.

இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த எதிரணி  பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பைப உறுதி செய்யாவிட்டால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது என்றார். இது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ குறிப்பிடுகையில், எதிரணி வெளியில் செல்வதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கி விவாதத்தை நடத்தலாம் என்றார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் வெளிநடப்பு செய்தனர்.

சபையில் இருந்த தமிழ் தேசிய  கூட்டமைப்பு மற்றும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிகள் சபையில் உரையாற்றினார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் எரான் விக்ரமரத்ன, அப்துல் ஹலீம், எஸ்.எம். மரிக்கார், வடிவேல் சுரேஷ், லக்ஷ்மன் கிரியெல்ல, சுஜித் சஞ்சய தமர்சேன, விஜேசிங்க, ஹெக்டர் அப்புஹாமி, எம்.உதயகுமார், ஜே.சி. அலவதுவல, சமிந்த விஜேசிறி,  ஹேசாவிதாரண ஆகியோர் இன்று உரையாற்ற இருந்தனர். அவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்ட போதும் அவர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

எதிரணியில் உரையாற்ற யாராவது உள்ளனரா என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி வினவினார்.  ஆனால் சபையில் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (03) மனுஷ நாணயக்கார எம்.பியின் உரையைத் தொடர்ந்து மற்றும் அவருக்கு மேலதிக நேரம் வழங்குமாறு தெரிவித்து, சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)