முஹம்மத் (ஸல்) பௌதிக விதிகளுக்குள் செயற்பட்ட மாபெரும் சாதனையாளர்

முஹம்மத் (ஸல்) பௌதிக விதிகளுக்குள் செயற்பட்ட மாபெரும் சாதனையாளர்-Prophet Muhammad

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித வரலாற்றின் திருப்புமுனையாகவும் மைல்கல்லாகவும் விளங்குகின்றார். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப மனிதனின் ஈருலக வாழ்வின் விமோசனத்திற்கு வழிகாட்டியுள்ள அன்னார் ஒரு மனிதராகவே இருந்தார். அவர் தெய்வாம்சம் பொருந்தியவரல்லர். கடவுளின் மகனுமல்ல. கடவுளின் அவதாரமுமல்ல.

அதனை நபி (ஸல்) அவர்களே, 'எல்லோரையும் போன்று நான் இறைவனின் அடிமை' என்றே தன்னைப் பற்றி கூறினார். 'கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அளவு மீறிப் புகழ்ந்தது போன்று என்னையும் புகழாதீர்கள். நான் இறைவனின் அடிமை மட்டுமே ஆவேன். எனவே என்னை இறைவனின் அடிமை, அவனது தூதர் என்றே கூறுங்கள்' என்றார்கள். (ஆதாரம்: புஹாரி)

இந்த உண்மையை நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல் குர்ஆன் மீண்டும் மீண்டும் கூறி உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றில் சில வசனங்களைக் கீழே தருவது பொருத்தமாக இருக்கும். 'நபியே கூறுவீராக, நான் உங்களைப் போன்ற மனிதனேயாவேன்.' (அல் குர்ஆன் 18:110)

அந்த வகையில் மனிதர்களுக்கு இல்லாத விஷேட ஆற்றல்கள் கொண்டவனாக நானில்லை என்று அன்னார் கூறினார். 'நபியே கூறுவீராக, என்னிடம் இறைவனின் செல்வ வளங்கள் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் நான் சொல்லவில்லை. இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுபவற்றையே நான் பின்பற்றுகிறேன்.' (அல் குர்ஆன் 6:50)

மேலும் மனிதர்களைப் பீடிப்பவையெல்லாம் தன்னையும் பீடிக்குமெனக் கூறுமாறு இறைவன் அவரைப் பணித்தான். 'நபியே கூறுவீராக, இறைவன் நாடிய வகையிலன்றி எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ, தீங்கிழைத்துக்கொள்ளவோ சக்தி பெற மாட்டேன். மறைவானவை பற்றிய அறிவு எனக்கிருந்தால் நன்மைகளை அதிகமதிகம் நான் சேர்த்துக்கொள்வேன். தீங்கும் என்னைத் தீண்டாது. நான் இறைநம்பிக்கை கொள்வோருக்கு எச்சரிக்கை செய்வோன், நன்மாராயம் சொல்வோன் மட்டுமே ஆவேன்.' (அல் குர்ஆன் 7:188)

வாழ்க்கையின் துன்பங்களும், கஷ்டங்களும் அவரைப் பீடித்தன. அவற்றின் உள்ளேயே அவர் வாழ்ந்தார் என்றும் நபி(ஸல்) அவர்களின் சாதாரண மனிதத்தன்மையை அல் குர்ஆன் மேலும் விளக்குகிறது.

'உம்மை அநாதையாகக் கண்டு இறைவன் புகலிடம் தரவில்லையா? வழி தெரியாது தடுமாறுவது கண்டு அவன் நேர்வழி காட்டினான். உம்மை வறுமைப்பட்டவராகக் கண்டு வசதிகள் கொண்டவராக ஆக்கினான்.' (அல் குர்ஆன் 93:6,7,8)

இந்த வசனங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஆரம்ப கால வாழ்வை விவரிக்கின்றன. அவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையை இழந்து அநாதையானார். பின்னர் தாயையும் ஆறு வயதாகும்போதே இழந்தார். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபிடமும் தந்தையின் சகோதரர் அபூ தாலிபிடமும் வளர்ந்தார்.

வறுமையால் பீடிக்கப்பட்ட அவர் கூலிக்கு ஆடு மேய்த்தார். கதீஜா என்ற பெண்மணியிடம் வியாபார வேலைக்கமர்ந்தார். கதீஜாவைத் திருமணம் முடித்ததன் பின்னர்தான் அவரது வறுமை நீங்கியது. அதேநேரம் வாழ்வின் பொருளென்ன? இப்பிரபஞ்ச இயக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? என்பன தொடர்பில் தெளிவான அறிவின்மையால் அவர் தடுமாற்றத்துக்கு உள்ளானதும் இயல்பானதாக இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் தூதைச் சுமந்து சென்றார். அவர்களை உன்னத வாழ்வை நோக்கி அழைத்தார். அவர்களது சமூக வாழ்க்கையில் காணப்பட்ட தீமைகளைக் களையக் கடுமையாக உழைத்தார். ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் அவரது அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை என்பது மாத்திரமல்ல. மிகக் கடுமையாக அவரை எதிர்த்தார்கள். அவரது தூதைத் தோல்வியுறச் செய்ய எல்லா வழிகளையும் கண்டார்கள்.

இதனால் நபி (ஸல்) கவலையுற்றார், வருந்தினார், கடுமையான மனத் தாக்கத்திற்கு உட்பட்டார். தனது தூதின் பாரத்தை உணர்ந்தார். மனிதராக இருந்து சீர்திருத்தக் களத்தில் இறங்கும் யாருக்கும் ஏற்படும் இந்த மனத் தாக்கத்தையே அவரும் உணர்ந்தார் என அல் குர்ஆன் விளக்குகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த சாதாரண மனித நிலையைத்தான் அவரை எதிர்த்தோர் தமது எதிர்ப்புக்கான ஒரு நியாயமாக முன்வைத்தனர்.

இறைவனோடு தொடர்புபட்டவர், இறைவனிடமிருந்து செய்தி கொண்டு வருபவர், இப்படி ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியுமா? சாதாரண மனித நிலைகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது நியாயம் அல்லவா! என அவர்கள் வாதாடினார்கள். 'என்ன இந்தத் தூதர் சாப்பிடுகிறார்? சந்தைகளுக்கு சென்று வருகிறார்? அவருக்கு ஒரு வானவர் இறக்கப்பட்டு அவரோடு ஓர் எச்சரிக்கையாளராக இருக்கக் கூடாதா?' என அவர்கள் கூறியதாக அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. (25:7)

இத்தோடு நில்லாது, முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட மக்கா, தாயிப் நகர்களில் வாழும் தலைமைத்துவங்களில் ஒருவராக இருக்கவில்லையே. அப்படியிருக்கும்போது அவர் எவ்வாறு நபியாகத் தெரிவு செய்யப்பட முடியும்? என்றும் அவர்கள் வாதிட்டார்கள். 'அவ்விரு நகர்களில் வாழும் ஒரு பெரிய மனிதருக்கு இக்குர்ஆன் இறங்கியிருக்கக் கூடாதா? என்றும் அவர்கள் கூறினார்கள்.' (அல் குர்ஆன் 43:31)

இறைத்தூதர் (ஸல்) அவர்களை சாதாரண மனிதராகக் கருத முடியாத அம்மக்கள் அவரிடம் அற்புதங்களை எதிர்பார்த்தார்கள். அற்புதங்கள் செய்து காட்டுமாறு வற்புறுத்தினார்கள். அப்போது அல் குர்ஆன் தூதரைப் பார்த்துச் சொன்ன ஒரே வார்த்தை, நீர் தூதர் ஆயினும் ஒரு மனிதர் என்பதுவாகவே இருந்தது. உதாரணத்துக்கு கீழ்வரும் வசனத்தை நோக்குவோம். 'பூமியிலிருந்து ஒரு பெரும் நீரூற்றை பீறிடச் செய்ய வேண்டும். அல்லது பேரீச்சம், திராட்சை தோட்டமொன்று உமக்கிருக்க வேண்டும். அவற்றிடையே ஆறுகள் பீறிட்டோட நீர் செய்ய வேண்டும். அல்லது நீர் கருதியது போன்று வானம் துண்டுகளாக உடைந்து எம்மீது நீர் விழச் செய்ய வேண்டும். அல்லது இறைவனையும் வானவர்களையும் முன்னால் கொண்டு வர வேண்டும். இவற்றை நீர் செய்யும் வரை நாம் உம்மை நம்பிக்கைக் கொள்ள மாட்டோம். அல்லது உமக்கொரு அலங்கார வீடிருக்க வேண்டும். அல்லது நீர் வானத்தில் ஏறிச் செல்ல வேண்டும். அங்கே ஏறிச் சென்று நாம் வாசிக்கத்தக்க ஒரு புத்தகத்தை இறக்கும் வரை நாம் நீர் வானத்தில் ஏறிச் சென்றதையும் நம்பிக்கை கொள்ள மாட்டோம் என்றிவ்வாறெல்லாம் அவர்கள் கூறினார்கள். நேர்வழிகாட்டலை நம்பிக்கை கொள்வதை விட்டு அவர்களைத் தடுத்தது.' (அல் குர்ஆன் 17:90–94)

இறைத்தூது கிடைக்கப் பெற்றதன் பிறகும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதராகவே இருந்தார். அந்த மனிதத் தன்மையில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்ற கருத்தையும் அல் குர்ஆன் வலுயுறுத்தியது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வசனங்களும் அக்கருத்தைத் தருகின்றன. என்றாலும் முன்னால் போன தூதர்களோடு ஒப்பிட்டு இக்கருத்தை விளக்கும் வசனங்களை கீழே தருகிறோம்.

'நபியே கூறுவீராக, நான் தூதர்களில் புதிய வித்தியாசமான ஒருவரல்ல. எனக்கும் உங்களுக்கும் என்ன நடக்கப் போகிறதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அறிவிக்கப்படுவதையே நான் பின்பற்றுகிறேன். நான் மிகத் தெளிவான எச்சரிக்கையாளன் என்பது தவிர வேறொன்றில்லை.' (அல் குர்ஆன் 46:9)

இவ்வாறு தனித்துவம் பெற்று விளங்கும் நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் சாதனையாளர் என்பது வரலாற்றில் திட்டவட்டமாக நிறுவப்பட்ட உண்மையாகும். அந்தச் சாதனையாளர் ஒரு மனிதராக இருந்தார். இவ்வுலகின் பௌதீக விதிகளினுள்ளே அவர் செயற்பட்டார். உயர்ந்த அர்ப்பணிப்பு, ஆழ்ந்த அறிவு நுணுக்கம், மாசுபடாத உயர்ந்த ஒழுக்கம் என்பவையே அவரது சாதனைகளின் அடித்தளமாக அமைந்தன. இந்த வகையில் அவர் மனிதர்களால் பின்பற்றத்தக்க மனிதத் தூதர் என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.

உஸ்தாதத் எம்.ஏ.எம். மன்ஸூர்