கிறிஸ்து நம்மோடு என்ற நம்பிக்கை

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு தரும் சிந்தனை

நடுக்கடலில் பாய்மரக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீரென்று சூறாவளி வீச கப்பல் திக்குமுக்காடி திசைமாறுகிறது.

இறுதியில் ஒரு பாறை மீது மோதி நொறுங்குகிறது. நம்பிக்கையுள்ள விழிப்புள்ள ஒருவன் மட்டும் தப்பிப் பிழைக்கிறான். ஒரு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு நீந்திக் கரையேறுகிறான். ஒரு சிறிய தீவு அவன் கண்ணில் பட்டது. பரவாயில்லை கடவுள் காப்பாற்றிவிட்டார் என்று சந்தோஷப்பட்டான்.

அவன் கரையேறிய தீவில் எந்த மனிதரும் வாழவில்லை . கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஒரு குடிசையை உருவாக்கினான். அங்கே கிடைத்ததை உண்டான். சொந்த ஊரை அடைவோம் என்ற நம்பிக்கை அவனில் நிலையாக இருந்தது.

ஒரு நாள் அவன் வெளியே சென்றபோது அந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. மூங்கில்களின் உராய்வினால் ஏற்பட்ட தீயால் குடிசை சாம்பலானது. சற்று நேரத்தில் நாலைந்து பேர் அங்கே வந்தார்கள்.

நாங்கள் மீன் பிடிக்க படகிலே இந்த பக்கமாக வந்துகொண்டிருந்தோம். இந்த தீவிலே புகை தெரிந்தது. யாரோ இருக்கிறார்கள் பார்க்கலாம் என நினைத்து வந்தோம். என்றார்கள்.

அப்போது அவன், எனது நம்பிக்கையும்விழிப்பும் வீண் போகவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினான்.

பல்லாண்டு காலமாகக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களின் கனவு நனவாக தாவீதின் தளிராக இயேசு இம்மண்ணில் உதயமானார். காத்திருத்தல் என்பது கனவு கண்டு கொண்டிருப்பது அல்ல. நம்பிக்கையோடு விழிப்போடு நமது கடமைகளை  நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகும்.

மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால்அந்த மரம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். எந்த அளவுக்கு நம்பிக்கையோடும் விழிப்போடும் காத்திருக்கிறோமோ அந்தளவுக்கு மனுமகனோடு இறையரசில் சேர நாமும் தகுதி பெறுவோம்.

நாளும் நேரமும் நமக்குத் தெரியாது (மத். 24:36 - 44). ஆனால் நம்பிக்கையோடு இருப்போர் வரவேற்கப்படும் தகுதியைப் பெறுவார்கள். மனுமகனைத் தரிசிப்பார்கள் (மத். 25:10).

நம் ஆண்டவர் இயேசு நம் தந்தையாம் கடவுளின் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக (1தெச. 3:13) என்று புனித பவுல் வாழ்த்துகிறார். நம்பிக்கையோடும் விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை உங்கள் உள்ளம் குடிவெறியிலும் களியாட்டத்திலும் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் (லூக். 21:34-35) என்பதே. விழிப்பு என்பது விழிகளைத் திறந்து வைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இன்றையச் சூழலில் மனிதன் சுய சிந்தனையை இழந்து தீமையைக் கூட நன்மையானது என்று நினைக்கிறான்.

அவனது ஆன்மீக வாழ்வும் தேக்க நிலையாகவே உள்ளது. பாவம் பற்றிய பயமும் மனசாட்சியைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை . இப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனை, விழிப்போடு வாழ திருவருகைக் காலம் அழைக்கின்றது.

கிறிஸ்து எங்கோ இருக்கிறார் என்று எண்ணி அவரது வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நமக்குள்ளே நம்மோடு நம்மில் ஒருவராக இருக்கிறார் என்பதை உணர்வோம்.

அருட்தந்தை லூர்துராஜ்