சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

- சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட ஆலோசனைக் குழுவொன்றை கூட்ட சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு அமைய, அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அனுமதி வழங்கினார்.

இது தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அளகியவன்ன உரிய அழைப்பை விடுப்பார் என சபாநாயகர் தெரிவித்தார்.

அதற்கமைய இது தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி. சாந்த பண்டார விடுத்த கோரிக்கையையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டதோடு, அமைச்சர் லசந்த அளகியவன்ன அதற்கான அழைப்பை விடுப்பார் என தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை (01) முற்பகல் 9.00 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனை தொடர்பில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்த, வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் பாராளுமன்ற வாளகத்தில் நடைபெறவுள்ளது.