இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி விசேட அதிதி

டிசம்பர் 4 ஆம் திகதி விசேட உரை

இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ டிசம்பர் 04 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு இராஜ்ஜிய தலைநகர் அபுதாபியில் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த சர்வதேச மாநாட்டில் 47 நாடுகள் பங்கேற்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உரை டிசம்பர் 4ஆம் திகதி இடம்பெறும். 5ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் இளவரசர் அல் நாயனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ செயற்படுவதோடு இந்திய வெளியுறவு அமைச்சர்கள் டொக்டர் ஜெயசங்கர், ஓமான் வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் வில்லியம் பாலகிருஷ்ணன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் குழுவின் உப தலைவராக செயற்படுகின்றனர். (பா)