சர்வதேசத்தை மீண்டும் கலக்கமடையவைத்துள்ள omicron திரிபு வைரஸ்!

- தென்னாபிரிக்காவிலிருந்து வருவோருக்குஉலகின் பல நாடுகள் கதவடைப்பு!

- டெல்டாவை விட வீரியமானதா? இன்றேல் முறியடிக்கப்படக் கூடியதா? மருத்துவ விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றார்கள்?

டெல்டா வைரஸ் திரிபை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து உலகளாவிய கொவிட் அச்சுறுத்தல் மீளவும் அதிகரித்துள்ளது. வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏற்கனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் உலகின் அனைத்து நாடுகளும் தற்போது உஷாரடைந்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாபிரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நாட்டில் கொரோனா 4 ஆம் அலை எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் தாக்கலாம். மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்தி விடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டு விட்டோம். நாம் எதிர்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்கத் தொடங்கலாம்".

இதேவேளை ஏற்கனவே கடந்த வாரம் லண்டனின் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த தீநுண்மியியல் நிபுணர் டாம் பீகாக் என்பவர், உருமாறிய புதிய வகை வைரஸ் குறித்து விளக்கமாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். பிரிட்டனில் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை என்றாலும், இதன் மீது விஞ்ஞானிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தென்னாபிரிக்காவில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டதை மேற்கோள்காட்டி, பிரிட்டனுக்கு அவர் ட்விட்டரில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

தென்னாபிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால்தென்னாபிரிக்கா,

​ெஹாங்​ெகாங், போட்ஸ்வனா ஆகிய நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளின் வழியாக வரும் பயணிகளை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுஒருபுறமிருக்க புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாதென இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா ஒமிக்ரான் குறித்து உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

"இது பேரழிவை ஏற்படுத்தாது. மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன். இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள Bambino Ges குழந்தைகள் வைத்தியசாலையின் விஞ்ஞானிகளே வெளியிட்டுள்ளனர்.

இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத முடியாது எனவும் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் அடையாளம்காணப்பட்டுள்ள 'ஒமிக்ரோன்' கொவிட் திரிபு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென்னாபிரிக்க வகை கொரோனா சர்வதேச நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது.

தென்னாபிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்க​ைகள் அல்லாதோர் அமெரிக்கா வருவதற்கு நவ. 29 முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.

தென்னாபிரிக்கா வழியாக கடந்த 15 நாள்களில் பயணம் செய்த வெளிநாட்டவர்கள் கனடா வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கனடாவை சோ்ந்தவர்கள் அவ்வாறு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியும், வெள்ளிக்கிழமை இரவு முதல் தென்னாபிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தென்னாபிரிக்காவிலிருந்து தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கூறுகையில், டெல்டா வகை கொரோனாவை விட தென்னாபிரிக்க வகை கொரோனா அதிக வேகமாக பரவும். மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அந்த வகை கொரோனாவை முழுத் திறனுடன் தடுத்து நிறுத்த முடியாது என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.

இதனால் புதிய வகை கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதேபோன்ற கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து நெதர்லாந்தும் பரிசீலித்து வருகிறது.

புதிய வகை கொரோனா மக்களிடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுதொடர்பான தகவல் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடையே பரவி பங்குச் சந்தைகளை பாதித்துள்ளது.

புதிய வகை கொரோனா குறித்த அச்சத்தால், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சியடைந்தன.

அமெரிக்காவிலும் அந்த நாட்டுப் பங்குச் சந்தை குறியீடான டோ ஜோன்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது.

புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு 'ஒமிக்ரோன் - omicron' என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் புதிய வகை கொரோனா கவலைக்குரிய வகையைச் சேர்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது.

கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரோன்’ எனபெயரிட்டது. இந்த வகையானது உலக சுகாதர நிறுவனத்தின் கவலைக்குரிய கொரோனா வகைகளில் முதன்மையானது ஆகும்.

கொரோனா வைரஸ் பல வகைகளில் ஊடுருவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரொனா வைரஸான ஓமிக்ரோன் (omicron) பெரும் பீதியை உலக நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், பல நாடுகளில் சோதனையை தீவிரப்படுத்த உள்ளன. இதனிடையே புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தென்னாபிரிக்காவில்விளையாட்டு போட்டிகள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.