சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள் பலருக்கு கொவிட் தொற்று

- ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதி சுற்று மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதி காண் தொடர் (ICC Women’s Cricket World Cup Qualifier) சிம்பாப்வே நாட்டில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிம்பாப்வேயில் இடம்பெற்று வரும் தகுதிச் சுற்று போட்டிகளை கைவிடுவதாக, நேற்று (27) இரவு, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்திருந்தது.

இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ், தாய்லாந்து, சிம்பாப்வே, அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்குபற்றும் இப்போட்டிகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. எட்டு அணிகள் பங்குபற்றவுள்ள மகளிர் உலகக் கிண்ண தொடரின் கடைசி மூன்று இடங்களைத் தீர்மானிப்பதற்காக, இத்தகுதிகாண் சுற்று இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் தற்போது அதிக வீரியம் கொண்ட கொவிட்-19 பிறழ்வான Omicron பரவல் காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில் இலங்கை மகளிர் அணி நெதர்லாந்து மகளிர் அணியுடன் ஒரு போட்டியில் பங்குபற்றியிருந்ததோடு, அப்போட்டியில் 34 ஒட்டங்களால் (D/L முறையில்) வெற்றி பெற்றிருந்தது.

இலங்கை மகளிர் அணிக்கு நேற்றையதினம் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடன் ஒரு போட்டி இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.