பாஜகவின் ஆணவத்தை விவசாயிகள் போராட்டம் என்றும் நினைவூட்டும்

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவையொட்டி, தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் திகதி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராட்டம் தொடங்கினர். போராட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தற்போது வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு கூறி உள்ள நிலையில் , விவசாயிகளின் போராட்டம் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி கூறுகையில், விவசாயிகளின் அசைக்க முடியாத சத்யாகிரகம், 700 விவசாயிகளின் உயிர்த்தியாகம் மற்றும் இரக்கமற்ற பா.ஜ.க.வின் ஆணவத்துக்காக இந்தப் போராட்டம் நினைவுகூரப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் விவசாயிகள் எப்போதும் போற்றப்படுகிறார்கள், போற்றப்படுவார்கள் என கூறிய பிரியங்கா காந்தி, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே இதற்குச் சான்று என்றார்.