பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட 8 அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி

பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட 8 அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி-Approval for the Appointment of 8 Secretaries to Ministries Granted by the Committee on High Posts Including Ministry of Defense

பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட 8 அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனர் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவும் உள்ளடங்குகின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனர் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன கடந்த 2019 நவம்பர் மாதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அந்த வகையில் இரு வருடங்கள் கழிந்த நிலையில் அவரை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எச்.கருணாரத்ன, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி டி.என். லியனகே, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.எல்.பி.ஆர். அபேரத்ன ஆகியோரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.ஏ.பி.வி. பண்டாரநாயக்க, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி.கே.ஏ.டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க ஆகியோரையும் நியமிப்பதற்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.என். ரணசிங்கவை நியமிப்பதற்கும், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக பி.ஏ.ஐ. சிறினிமல் பெரேராவையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாபா, ஜோன் செனவிரத்ன, தலதா அத்துகோரள மற்றும் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.