பெண்ணிய சிந்தனைகள் தமிழ் மரபில் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பின்பற்றப்பட்டுள்ளன

ஒளவையாரின் செய்யுள்கள் அவற்றிலுள்ள உணர்வின் வெளிப்பாடுகள் இன்றுவரையிலும் அவரது வயதின் மீதான  தேடுதலை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.பல திறமையான பெண் புலவர்களின் மேன்மை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம்.

மேலைத்தேய சிந்தனையின் வெளிப்பாடாகவும், நவீன சாதனங்களின் பயனாகவும் நாம் கருதும் பெண்ணிய சிந்தனைகள் தமிழ்மரபில் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பின்பற்றப்பட்டுள்ளன. அதற்கு தகுந்த ஆதாரமாக விளங்குபவர்கள் நமது தமிழ் இலக்கியங்களை அலங்கரித்தது மட்டுமன்றி அரச சபைகளையும் அலங்கரித்த பெண் புலவர்கள். ஏராளமான பெண்புலவர்கள் உள்ளனர். ஆனால் இவற்றிலும் பலதிறமையான பெண் புலவர்களின் மேன்மை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் மறுப்பதற்கில்லை. எவ்வாறு இருப்பினும் ஒளவை என்ற பெயர் நீண்டகாலமாக புலவர் பெயர் வரிசையில் வலம் வருவதனை காணமுடியும்.

சங்ககாலம் தொடக்கம் தற்காலம் வரையில் ஆங்காங்கே இந்த பெயருக்கான அடையாளம் உள்ளது. அதியமானின் நண்பராக இருந்த ஒளவைப்பாட்டியிலிருந்து  நவீன ஒளவைவரை அவர்களின் எழுத்தும் மொழியும் தனித்துவமாகவே உள்ளது. தமிழறிஞர் மு.அருணாச்சலம் வரலாற்றில் கிடைத்த ஆதாரங்களின்படி கிட்டத்தட்ட ஆறு ஒளவையாரை அடையாளப்படுத்தியுள்ளார் என்பதனை அறிவோம்.

இந்த ஒளவையின் உருவ அமைப்பில் பலருக்கும் அவர் இளம்பெண்ணாகவோ , பெண்மணியாகவோ அல்லாமல் பாட்டியாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார். அதற்கு அவர்கள் பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அறிவுரைகளை தாண்டி ஒளவையாரின் செய்யுள்கள் அவற்றிலுள்ள உணர்வின் வெளிப்பாடுகள் இன்றுவரையிலும் அவரது வயதின்மீதான தேடுதலை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. கவிமணி அவர்கள் ஒளவையாரை வியந்துபாடிய இந்த பாடல் அவரது தோற்றத்தினை நமக்கு வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

“ஒளவைக் கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி
பழங்கிழவி நெல்லிக் கனியைத் தின்றுலகில் நீடு வாழும் தமிழ்க்கிழவி
வெல்லற் கரிய மாந்தரெல்லாம் வியந்து போற்றும் ஒருகிழவி
கூனக் கிழவி;...!”

மேற்படி பாடலின் அடிப்படையில் அரசருக்கு அறநெறிகளை எடுத்துக்கூறி அவர்களிடையே உள்ள வேற்றுமை, முரண்பாடுகளைந்து வேந்தர்களிடையே நட்பை வளர்த்த ஒளவையாரையும் இந்த சமூகம் அறியும். நடக்கவிருந்த போரை தனது கவிபுனையும் வல்லமையால் தடுத்து நிறுத்திய சாதுர்யமிக்க பெண்ணாகவும் , மன்னர்களிற்கே அறிவுரை கூறக்கூடிய உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த பெண்மணியாகவும் நாம் ஒளவையாரை கருதலாம். அங்கவை,சங்கவை  இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த ஒளவையார் தவிர கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் ஒருவரும் ஒளவையார் என வழங்கப்பட்டார். சங்ககால புலவரான ஒளவையார் பாடிய 59பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப் புலவர் பாடல் தொகை வரிசையில் இவர் 9ஆம் இடம் பெற்றுள்ளார். ஆனால் இவரது தோற்றத்தை பொறுத்தவரையில் ‘இளமை ததும்பும் விறலி’ என அதியமான் தன்னை விளம்பியதாக அவர் குறிப்பிட்டதிலிருந்து அறியலாம்.

“மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்..”

நான்குகோடி பாடல் எழுதிவர கட்டளையிட்ட மன்னனுக்கு தனது ஒவ்வொரு பாடலும் கோடிபொன்பெறும் எனகூறி நான்கு பாடல்கள் எழுதினார் ஒளவையார். அங்கு அவர் கையாண்ட சொற்திறமும், , ஆளுமையும் இன்றும் அழிக்க முடியாது. இன்றுவரையில் தமிழர் பண்பாட்டில் மதியாதார் வீட்டின் முற்றத்தை மிதிப்பதில்லை. அத்தோடு விருந்தோம்பல் செய்யாத வீட்டின் கதவுகளை யாரும் தட்டுவதும் இல்லை.

“சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக ! உட்காதே—பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவையை யுங்கூடத் தான்..”

பாரிமகளிருக்கு திருமணம் செய்துவைத்தவரும் ஒரு ஒளவையார் என பார்த்தோம். இந்த செய்யுளில்  சேரமன்னனை சீர்கொண்டுவருமாறு கட்டளையிடுகின்றார். இதேபோன்று பாண்டிய, சோழ மன்னர்களையும் சீர்செய்ய அழைத்து இரு பெண்களுக்கும் மணம்முடித்து வைத்தார். பாரி குறுநில மன்னனுடன் இருந்த போர்மனப்பான்மையையும் தவிர்த்து ஒளவையாரின் குரலுக்கு மூவேந்தரும் செவிசாய்த்திருக்கின்றார்கள் என்றால் அவரது புலமையும் ஆளுமையும் எத்தகையதாக அமைந்திருக்க கூடும்.

பவதாரணி ராஜசிங்கம்