மு.கா. கட்சி பதவிகளிலிருந்து நசீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் இடைநிறுத்தம்

மு.கா. கட்சி பதவிகளிலிருந்து நசீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் இடைநிறுத்தம்-SLMC Removed Naseer Ahamed-HMM Harees-Faizal Cassim-Suspended From Their Posts in the Party

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ.ல.மு.கா எம்.பிக்கள் நஸீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் ஆகிய மூவரும் கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றத்தில் வரவு - செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும்  கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகிய மூவரும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக அக்கட்சி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022 வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்றுமுன்தினம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3ஆம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) முதல் இடம்பெற்று வருவதுடன், 2022 வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.