மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டுகள்?

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டுகள்?-Motorcycle Thief

இளைஞன் ஒருவன் திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை அவனது பெற்றோர் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று இன்று (18) இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு இன்று காலை பல்சர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.

அதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை சூசகமாக திருடிக் கொண்டு அவரது வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை கண்டு கொண்ட பெற்றோர். இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை வாழைச்சேனை பொலிஸாரின் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருட்டுச் சம்பவத்தை தடுக்க பெற்றோர் எடுத்துக் கொண்ட இந்த செயற்பாட்டுக்கு மோட்டார் சைக்கிள் உரிமையாளரும், பொலிஸாரும் திருட்டுச் சம்பவத்தை செய்த இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம். பர்ஸான்)