அமர்க்களத்து சுடர் விளக்கு

செல்வச் செழிப்பும், சீமான் இல்லச் செல்வமும், இளமைத் துள்ளலும், அழகு கொஞ்சும் மேனியும் கொண்ட சீமாட்டி பிளாரன்ஸ் நைட்டிங்கேல், தன் மாளிகையில் "டைம்ஸ்' என்ற செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கிறாள். அதில் உள்ள போர்க்களச் செய்திகளைக் கண்டு கலங்கினாள், நெஞ்சம் பதறினாள். திருமணப் பந்தம் வேண்டாம் என்று வெறுத்துவிட்டு, மருத்துவப் படிப்பும், அறுவை மருத்துவப் பயிற்சியும் பெற்ற அந்தச் சீமாட்டியின் பதற்றத்துக்குக் காரணம் என்ன?

பால்டிக் கடலோரத்தில் நடந்த கிரிமியா போரில் குண்டு அடிபட்டுக் குற்றுயிரும்-குறையுயிருமாகப் போர்முனையில் வீழ்ந்த வீரர்கள் கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி இல்லை; குடிக்க நீரில்லை; உண்ண உணவில்லை; உடுக்க மாற்று உடையில்லை. இப்படி உயிருக்குப் போராடுவதைக் காட்டிலும் அவர்கள் போர்க்களத்திலேயே மடிந்திருக்கலாம் என்ற செய்தியே அந்தச் சீமாட்டியின் கலக்கத்துக்கும் பதற்றத்துக்கும் காரணம்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களை, "ஜெர்மனி கெய்சர் ஓர்த்' மருத்துவமனைப் பயிற்சிக்குப் பரிந்துரை செய்தவரும் கிரிமியா போர்க்களச் செயலாளருமான சர். சிட்னி ஹெர்பர்ட், அன்புள்ள நைட்டிங்கேல்! கிரிமியா போர்க்களத்தில் அடிபட்ட வீரர்களுக்கு மருத்துவப்பணி செய்ய உடனே வருக என்று எழுதிய கடிதத்தைக் கண்டதும், பதறிய சீமாட்டி மகிழ்ச்சிக் கூத்தாடினாள்; எதற்காகத் திருமணத்தைச் செய்துகொள்ளக் கூசினாளோ, எதற்காகப் பெற்றோரை ஏசினாளோ, அந்த மருத்துவப் பணி வாய்ப்புக் கடிதம் வழியே வந்துவிட்டது. எனவே, போர்முனை நோக்கி உடனே கிளம்பிவிட்டாள் அந்தச் சீமான் வீட்டுச் செல்வ மகள்.

மலை உச்சியில் மருத்துவமனை - அடிவாரத்தில் மருத்துவம்

மலை உச்சியில் மருத்துவமனை இருந்தது. அதன் அடிவாரத்தில் வீரர்கள் குண்டடிபட்டுக் கிடந்தார்கள். அவர்களை மருத்துவ மனைக்கு இழுத்துவர வேண்டியதாயிற்று. எங்கும் பாறை, பனி, சேறு; குண்டும் குழியுமான குறுகிய ஒற்றையடிப் பாதை. காலொடிந்து கதறும் வீரர்கள் ஒரு பக்கம்; கையின்றி அலறும் வீரர்கள் ஒருபக்கம்; கண்களை இழந்து வழியும் ரத்தத்தில் அல்லாடும் வீரர்கள் மறுபக்கம்; மரக்கிளைகளில் கேட்பாரற்றுத் தொங்கும் சடலங்கள். மருத்துவமனைக்கு இழுத்துவரப்பட்ட வீரர்களுக்கு வேண்டிய படுக்கைகள் இல்லை; அவர்களுக்கு உரிய மருந்தும் இல்லை! உள்ளே இருக்கும் வீரர்கள் செத்துப்போனால்தான் வெளியே தாழ்வாரத்தில் இருக்கும் வீரர்களுக்கு இடம் கிடைக்கும். அதுவரை நோயாலும், குளிராலும் வெளியே இறப்போர்தொகை உள்ளே இருப்போர் தொகையைவிட பெரிது. அந்த மருத்துவமனையைச் சுற்றிலும் நாய்கள் செத்து அழுகிக்கிடந்தன. அந்த மருத்துவமனை கொசுக்களின் கூடாரமாயிற்று; எலிகளின் வேட்டைக் காடாயிற்று.

மருத்துவமனையில் இருந்த நாற்பது செவிலியர்களில் ஒருவர்கூட மருத்துவப்பணி செய்யாமல், பொழுதைக் கழித்தனர். செவிலியர்களுக்கு இருக்க வேண்டிய இரக்கம், பொறுமை, ஆறுதல் கூறல் இவை எள்ளளவும் அவர்களிடம் இல்லை. இத்தகைய மருத்துவமனைக்கு வந்தவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற சீமாட்டி.

சீர்திருத்தம்

மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகியனவற்றை முழுதும் அறிந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், அந்த மருத்துவமனையின் பொறுப்பை ஏற்று உள்ளே நுழைந்தபோது, அவரை எலிக் கூட்டங்களும், கொழுத்த கொசுக்களும் வரவேற்றன. மாற்றாடையின்றிப் புண்ணோடு புரளும் நோயாளர் உடலில் இருந்து வந்த முடைநாற்றம் குடலைப் பிடுங்கித் தின்றது.

முதலில் மருத்துவமனையைச் சுற்றிலும் செத்துக் கிடந்த நாய்களைக் குழிகளில் இட்டு மண்ணால் மூடினாள்; எலிக் கூட்டங்களை அறவே ஒழித்துக்கட்ட ஏற்பாடு செய்தாள்; நோயாளர் புண்களை வெந்நீரால் கழுவி, அவர்தம் ஆடைகளைத் துவைக்க அவர்களுடைய உறவினர்களையே பணித்தாள்; இரவில் ஒளிர்ந்த மெழுகுவர்த்திகளை நீக்கிவிட்டு, கண்ணாடி பொருத்திய விளக்குகளுக்கு ஏற்பாடு செய்தாள்; நோயாளர் படுக்கை அருகே இருந்த அடுப்புகளை அகற்றித் தக்க புகைப் போக்கிகளோடு கூடிய சமையலறையைத் தனியே அமைத்திட ஏற்பாடுகளைச் செய்தாள்; பணி செய்யாத செவிலியர்களைப் பணிநீக்கம் செய்து, தக்க இளஞ்செவிலியர்களைப் பணியமர்த்தினாள். புதிய செவிலியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மருத்துவச் சேவை பற்றிய பயிற்சியை அளித்தாள்; நான்கு மணிக்கு ஒருமுறையாவது நோயாளர்களைக் கவனித்து, அவர்களுக்கு வேண்டிய மருந்துகளை நேரம் தவறாமல் தரத் தூண்டினாள். இவையெல்லாம் செம்மையுற நடைபெறுகின்றனவா என்று இரவும் பகலும் கண்காணித்து வந்தாள்.

போர்முனையிலும் பெரிய தொண்டு

மலையுச்சியில் இருந்த அந்த "ஸ்குட்டாரி' மருத்துவமனைப் பணியோடு, போர்முனைக்கும் பீரங்கி வண்டியில் ஏறிச் சென்று அங்கே அடிபட்டு விழும் வீரர்களைப் பச்சை ரத்தம் சொட்டச்சொட்ட அள்ளி எடுத்துவந்து உடனுக்குடன் மருத்துவம் செய்தாள் போர்முனை வீரர் ஒருவர் இதைக்கண்டு பதறினார். அம்மா நீங்கள் உயிரோடு இருந்தால்தான், எங்களைக் காப்பாற்றுவீர்கள், குண்டடிபட்டு மாண்டுபோனால், நாங்கள் ஆதரவில்லாமல் மடிவோமே! எனவே, நீங்கள் போர்முனைக்கு வராதீர்கள் என்று வேண்டினார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அடிபட்ட வீரர்களை அள்ளி எடுத்துவந்து மருத்துவம் செய்வதிலேயே இரவு-பகல் பாராமல் அரிய தொண்டாற்றினாள் முன்கள மூலிகைப் பாவை.

ஒவ்வொரு நோயாளர் படுக்கை அருகே அமர்ந்து, ஒருதாய் குழந்தைகளுக்குப் புகட்டுவதைப்போல அன்போடு மருந்தைப் புகட்டுவாள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். ஓரளவு காயங்கள் ஆறிவிட்டன என்று எண்ணி மகிழும்போது, கிரிமியா காய்ச்சல் தொற்று நோயாளர்களை வாட்டியது.

கைவசம் உள்ள மருந்துகளால் காய்ச்சலைத் தணித்தபோது, "பிளேக்' என்ற இடைவிடாக் கழிசல் நோய்த்தொற்றால் வீரர்கள் மரண வாயிலை அடையும்போது உரிய மருந்துகள் தந்து அந்தக் கொள்ளை நோயையும் ஒழித்தார். தொண்டே உருவமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல், அவர்தம் தொடர் தொண்டால், நாள் ஒன்றுக்கு 60%என்ற இறப்பு விகிதம் 2%என்று சரிந்தது. அவர் எப்போது உறங்குவார், எப்போது விழிப்பார் என்று அவருக்கே தெரியாது.

இரவில் எந்த நேரத்திலும் கையில் ஒரு விளக்கை ஏந்திப்பிடித்து, நோயாளர் படுக்கை அருகே நின்று, கவனித்து, ஆவன செய்த பின்னரே, படுக்கப்போவார் அந்த அமர்க்களத்துச் சுடர் விளக்கு. இந்த அரிய தொண்டைப் போற்றும் வகையில், ஐரோப்பா அச்சு ஊடகங்கள், கிரிமியா போர் மக்களைக் கொன்று குவித்துவிட்டது; ஆனால், நைட்டிங்கேல் அம்மையார் கிரிமியாவையே அடிமை ஆக்கி அடிபணிய வைத்துவிட்டார் என்று கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.

நான் படிக்காத மொழிகள் இல்லை; சுற்றாத ஊர்களில்லை; கேளாத புகழ்மொழிகள் இல்லை; ஆனால் நான் காண விழைவது ஒன்றே; அது மரணம்தான் என்று மரணத்தைத் தழுவக் காத்திருந்தபோது, அவருடைய 90-ஆம் வயதில் அது வந்துவிட்டது. கண்ணிழந்தோரின் கண்ணாய் இருந்த அம்மூதாட்டியின் கண்கள் நிலையாக முடிக்கொண்டன. ஓடி ஓடித் தொண்டு செய்த கால்கள் அசைவற்றுப் போயின. என்றாலும் அவர் ஆற்றிய தொண்டு சாகுமா என்ன?

புகழொளி பரவட்டும்

சீமான் வீட்டுச் செல்வத்தைத் துறந்து இளமை இன்பத்தை மறந்து, தன் வாழ்நாளைத் தொண்டுக்கே ஆக்கி, கிரிமியா நோயைப் புறங்கண்ட வீரமங்கையின் புகழ் என்றும் நின்று ஒளிவீசும் என்பது உறுதி! எங்கே நோய் குணமடைகிறதோ, எங்கே மருத்துவமனைகள் உண்டோ, எங்கே செவிலியர் உழைப்பும் அன்பும் மிளிர்கின்றதோ, எங்கே உருமாறி உடலங்கள் எழுந்து நடமாடுகின்றனவோ, அங்கெல்லாம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் ஏந்திய விளக்கொளியின் சுடர் பரவிக்கொண்டே இருக்கும்.