வன்மை, மென்மை, சாதுரியம், சித்தரிப்பு, கற்பனை நயம் சங்க காலம் முதல் பெண் எழுத்துகளிலும் உண்டு

சமூகத்தின் உயர்ந்த நிலையில் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண், அச்சமூகத்திற்கு சந்ததியை பெற்றுத்தந்தவள். பொதுவாக பெண் வீட்டையும், நாட்டையும் முன்னேற்றுபவளாக, காதலையும் , களவினையும், போரையும் ஆதரிப்பவளாக தன்னை மாற்றிக்கொண்ட காலகட்டமாக இலக்கியங்களின் ஆரம்பகால கட்டமான சங்ககாலத்தை காணமுடியும்.

முதல் சங்கத்தில் இயற்கைப் புணர்ச்சியும், இரவுக்குறியும், பகற்குறியும், உடன்போக்கும் பெண்ணால் எளிதாகக் கையாளப்பெற்றமையை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தான் விரும்பிய ஒருவனை மனதால் மணந்து புணரும் சுதந்திரம் அவளிடமிருந்தது. ஆனால் கடைசங்க காலப்பகுதியில் அவற்றில் பாரிய மாற்றம் தோன்றியது என்பதற்கும் இந்த இலக்கியங்களே சான்று.  'ஐயர் யாத்த திருமணச் சடங்கினுள்ளும்' 'கற்பு' என்னும் ஒழுக்க விதியினுள்ளும் வாழும் வாழ்வியலுக்கு பெண் நகர்த்தப்பட்டாள்.

சங்க இலக்கியங்களை பார்க்கும் போதெல்லாம் பெரும் ஆச்சரியம் எனக்குள் எழுவதுண்டு. தற்காலத்திலும் சில பெண் கவிஞர்கள் தம் கவிதைகளில் பேச அச்சம்கொள்ளும் பெண்ணின் காமம் பற்றி மிகநுட்பமாகவும் முகம்கோணாதவாறும் எடுத்தாண்டுள்ள செய்யுள்களும் உள்ளன. இவற்றை இயற்றியவர்கள் பெண்பாற் கவிஞர்கள். அவர்களின் எழுத்துக்கள் வன்மையாக அல்ல மென்மையாகவும் சாதுரியமாகவும் அதனை இயம்புகின்றன.

காமம் சார்ந்த சித்தரிப்பில் கற்பனை நயங்களும், உணர்ச்சிகளும் அழகியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. பலாமரம் ஒன்றின் சிறிய கிளையில் அதனைவிடவும் அதிக எடையுள்ள பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பது போல் தலைவியின் சிறிய உயிர் அவளால் சுமக்க முடியாத அவளின் உயிரைவிடவும் மிகப்பெரியதான காமத்தைச் சுமந்துக் கொண்டிருக்கிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இந்த செய்யுள்.

'வேரல் வேலி வேர்க் கோட் பலவின் சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!' (குறுந்: 18)

நன்முல்லையாரின் இந்த செய்யுள் பெண் தன் உணர்வினை, மனதில் உள் பயத்தை, எதிர்பார்பினை , பிறர் அறியதுடிக்கும் இரகசியத்தை தலைவனுக்கு சாமர்தியமாக தன்மொழியில் எடுத்துரைத்துள்ளார்.  சங்ககால புலவர்களில் இவர் மட்டுமல்ல இன்னும் ஏராளமான சிறந்த பெண்கவிஞர்கள் உள்ளனர்.

சங்ககால புலவர்களில் அறிவுத்திறமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவராக ஒளவையாரை நாம் காணலாம். நமது தமிழ் இலக்கிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் ஒளவை எனப் பெயர் கொண்ட புலவரை நாம் காணமுடிகின்றது. இவர்கள் அனைவரையும் ஒரு பொதுத்தன்மையின் கீழ் கொண்டு வருகின்றோம். அதாவது தோற்றத்தில் அவர் வயதானவர் . வெள்ளை முடியும் தூய ஆடையும் ஊன்றிய கோலும் அவரது அடையாளமென நாம் கொள்கின்றோம். நூற்றாண்டுகளுக்கு பொதுவாய் ஒருவர் இருப்பதென்பது சாத்தியமில்லை. தமிழறிஞர் மு.அருணாச்சலம் வரலாற்றில் கிடைத்த ஆதாரங்களின்படி கிட்டத்தட்ட ஆறு ஒளவையாரை அடையாளப்படுத்தியுள்ளார்.

முதலாவது ஒளவையார் சங்ககாலக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்தவர். இன்றைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அது அமைந்துள்ளது. ஒளவையார் விறலி என்னும் கலைஞர்கள் மரபினைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. தன்மரபில் இருப்பதனை கொண்டாடி பாடல்களை படைத்த பெருமைக்கு உரியவர்.

மேற்பட்ட வகையில் சங்ககால ஒளவையார் சிறந்த கவிஞர் என அறியப்பட்டதால் பின்னாளில் வந்த சிறந்த கவிஞர்களுக்கு ஒளவை என பெயர்கொடுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் சில அறிஞர்கள். ஆனாலும் அதியமானின் நெல்லிக்கனியை உட்கொண்டதால் ஒளவையார் நீடித்து வாழ்ந்தார் என்று வாதிப்பவர்களும் உண்டு. இவரது செய்யுட்கள் காலத்தை காட்டும் கண்ணாடி மட்டுமல்ல பெண் உணர்வுகளை தெள்ளத்தெளிவாய் காட்டுவன.

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம். சங்க உரைகளில் பல இடங்களில் ஆடவர் என்பது ஆண்மகன் என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பெண் தலைமை சமூகம் மாற்றமடைந்த நிலையில் ஆண்முன்னிலை பெற்றதனையும் அவர்களது பண்புகள் நாட்டிற்கு நன்மையுடையதாகும் என்கிறார் ஒளவை.

இதேபோன்று குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள ஒளவையாரின் பாடல்கள் காமம் தரும் வலியினை ஆண், பெண் என்ற இரு தரப்பிலிருந்தும் வேறு வேறு மொழிகளில் அதாவது சொல்லாடல்களில் பதிவு செய்வதைக் காண முடிகிறது.

சுடப்படாத மட்கலத்தில் நீர் நிரப்பப்படுகிறது. அந்தப் பச்சைமட் கலத்துள் பெய்த நீரானது கசிந்து போகாமல் தாங்க முயல்வதுபோல் காமத்தால் நெகிழ்ச்சி அடைந்திருக்கும் தலைவனின் நெஞ்சும் அமைந்திருப்பதாக ஆணின் பார்வையில் காமம் எத்தகையது என்றும் , பெண்ணின் பார்வையில் ஊராரின் நகையாடுதல் வந்து விடுமோ என்ற பயத்தையும் தன் செய்யுள்களில் அழகாக எடுத்துரைக்கின்றார். முதிர்கன்னியாக கூறப்படும் சங்ககாலத்து ஒளவையாரின் அடிகள் அவரை நாம் இன்னும் அறியவேண்டும் என்பதையே காட்டுகின்றது.

பவதாரணி ராஜசிங்கம்