- மு.ப. 1.45: வந்திறங்கியவர்கள் மு.ப. 8.00: SSC அணி போட்டியில்
2021 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக சென்ற இலங்கை அணி வீரர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
12 அணிகளைக் கொண்ட லீக் தொடரில் குழு 1 இல் தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளை (4 புள்ளிகள்) மாத்திரம் வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாத காரணத்தால் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.
இதேவேளை, இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாடு திரும்பிய இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் சிலர் இன்று மு.ப. 8.00 மணியளவில் உள்ளூர் போட்டியில் பங்குபற்றுவதற்காக மைதானம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தனது Twitter கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான திலிண கண்டம்பி,
நாட்டுக்கான பணியை நிறைவு செய்து, அதிகாலை 1.45 மணிக்கு இலங்கையை அடைந்த வீரர்கள், அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பியிருந்தனர். ஆயினும் தமிழ் யூனியன் அணியுடனான போட்டியில் SSC அணி சார்பில் விளையாடுவதற்காக மு.ப. 8.00 மணிக்கு மீண்டும் மைதானம் திரும்பியுள்ளனர். தசுன் சானக, அவிஷ்க பெனாண்டோ, சரித் அசலங்க ஆகியோரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது...
Just finished National duty. Landed in Sri Lanka at 1:45 a.m. Reached home at 4.30 a.m. At the ground by 8.00 am to play for SSC against Tamil Union. . . Superb commitment from @dasunshanaka1 @Avishka28 and @CharithAsalanka
I'm sure our future will be bright ! pic.twitter.com/uHELl31q00— thilina kandambi (@thilinakandambi) November 6, 2021