வாகனம் செலுத்தும் போது தூக்கக் கலக்கத்தினால் ஏற்படுகின்ற விபரீதங்கள்!

வாகனம் செலுத்தும் போது தூக்கக் கலக்கத்தினால் ஏற்படுகின்ற விபரீதங்கள்!

வாகனம் செலுத்தும் போது நித்திரைத் தூக்கம் ஏற்படுவது இயல்பானதுதான் எனத் தோன்றினாலும், அது மிகவும் பயங்கமானது. இதன் போது போதைவஸ்து உட்கொண்டு இருப்பவரின் நிலைமை போன்றே இருக்கும்.

தீர்மானம் எடுக்கும் திறமை குறைவடையும், அவசர நிலையில் எதிர்வினை ஆற்றுவதற்குத் தாமதமாகும், நடப்பவை பற்றி உணர்ந்து கொள்ள காலம் பிடிக்கும். இதனால் மரணத்தை ஏற்படுத்தும் விபத்துகள் ஏற்படலாம்.

வாகனம் செலுத்தும் போது எவருக்கும் தூக்கம் வரலாம். வாகனம் செலுத்தும் போது நித்திரை தூக்கம் ஏற்படுவதால் நிகழும் பெரும்பாலான விபத்துகள் இளவயதினரிடையேதான் அதிகமாக இடம்பெறுகின்றன. இதற்கு பிரதான காரணமாக அமைவது இளவயதினர் நீண்ட நேரம் விழித்திருப்பதும் குறைந்தளவு நேரம் தூங்குவதுமாகும். இரவு வேளைகளில் அதிகமாக வாகனம் செலுத்துவதும் இதற்குக் காரணமாகும்.

சாரதிகளைப் பொறுத்தவரை ஆபத்தான சந்தர்ப்பங்கள் வருமாறு:

நித்திரை யின்றி இருக்கும் போது அல்லது களைத்து இருக்கும் போது, இடைநிறுத்தாமல் மிக நீண்ட தூரம் வாகனம் செலுத்தும் சந்தர்ப்பங்களில், இரவு முழுவதும் வாகனம் ஓட்டும் சந்தர்ப்பங்களில், பகல் உணவையடுத்து உடனடியாக வாகனம் செலுத்த தொடங்கும் சந்தர்ப்பங்களில், சாதாரணமாக மற்றைய நாட்களில் நித்திரை செய்யும் நேரத்தில் புதிதாக வாகனம் செலுத்த புறப்படும் சந்தர்ப்பங்களில், தூக்கம் ஏற்படுத்தும் மருந்துகள் பாவிக்கும் சந்தர்ப்பங்களில், மதுபானம் உள்ளிட்ட போதை தரும் திரவியங்கள், போதைவஸ்த்துக்கள் உட்கொள்ளும் போது, தனித்து வாகனம் செலுத்திச் செல்லும் சந்தர்ப்பங்களில், நீண்ட தூரம் ஒரே சூழலில் சலிப்புடன் வாகனம் செலுத்தும் போது.

இதேவேளை வாகனம் ஓட்டும் போது நித்திரைத் தூக்கம் ஏற்படலாம் என்பதை உணர்த்தும் ஆபத்து அறிகுறிகள் எவை?

சற்று முன்னர் கடந்து வந்தது எந்த இடம் என்பது கூட மறந்து போதல்,நெடுஞ்சாலையில் காணப்படும் சமிக்ஞைகள், அடையாளங்களை மறந்தவர் போல, கவனத்தில் எடுக்காதவர் போல வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் நினைவுக்கு வருதல், அடிக்கடி கொட்டாவி விடுதல்,

கண்களை திறந்து கொண்டிருக்க முடியாமல் கண்களை தானாகவே மூடிக் கொள்ளல், தனது தலையை நேராக வைத்திருக்க முடியாது இருத்தல்.

மேலே குறிப்பிட்ட ஆபத்தான அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீங்கள் எந்த நேரத்தில் நித்திரைத் தூக்கத்திற்கு உள்ளாவீர்கள், அதனால் எப்போது விபத்து ஏற்படலாம் என எவராலுமே எதிர்வு கூற முடியாது. முடிந்தளவு விரைவாக வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நிறுத்தி விட்டு தூங்க வேண்டும்.நீங்கள் முடிந்தளவு விரைவாக செயற்பட வேண்டும். வானொலியை செயற்படுத்துதல், ஜன்னல்களை திறந்து வைத்தல் முதலிய செயற்பாடுளினால் பலனில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான நிலைமையை எவ்வாறு தடுக்க முடியும் எனப் பார்ப்போம்.

வாகனம் ஓட்டத் தொடங்கும் முன்னர் நீங்கள் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்க வேண்டும். நீண்ட தூர பயண ம் செய்யும் போது பொருத்தமான நண்பரை துணைக்கு சேர்த்துக் கொள்க. அவர் சாரதியுடன் உரையாடியவாறு இருக்க வேண்டும். போதைவஸ்துக்கள் மற்றும் நித்திரை தூக்கம்ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் செலுத்த தொடங்கி விட்டால் குறைந்த பட்சம் இரு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை வாகனம் செலுத்துதலை நிறுத்தி/ வேறுபாட்டை ஏற்படுத்தி கொள்ளவும். வாகனத்தின் உள்ளே நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இலகுவான உணவை உட்கொள்க. ஆசனப்பட்டி அணிந்து கொள்க.

வாகனம் செலுத்தும் போது நித்திரை தூக்கம் ஏற்படல் ஒரு நோய் நிலையா?

இது ஒரு நோயின் ஆரம்ப கட்டமாக இருக்கக் கூடும். எவ்வாறாயினும் சாதாரண சந்தர்ப்பங்களில் ஒழுங்கான நித்திரை கொள்ள முடியாமை மற்றும் நித்திரையின் போது அடிக்கடி விழிப்பு ஏற்படல் அநேகமாக நோய் நிலையாக இருக்கலாம். அந்த நோய் Obstructive Sleep Apnea (OSA) என்று அழைக்கப்படும்.

இந்த நோய் நிலை உள்ளவர்களுக்கு வாகனம் செலுத்தும் போது நித்திரை தூக்கம் ஏற்படலாம். இதற்கு வயது எல்லை,ஆண் பெண் வேறுபாடு இல்லை.

இந்த நோயின் குணங்குறிகளாவன:

அடிக்கடி மூச்சு நின்று விடல், விழித்தெழும் போது வாயும் தொண்டையும் உலர்ந்து போதல், காலையில் விழித்தெழுந்த பின் தலைவலி ஏற்படல், விழித்தெழுந்த பின் களைப்பு ஏற்படல், விழித்தெழுந்த பின் ஏற்பட வேண்டிய புத்துணர்ச்சி இல்லாமை, மனதை ஒரு முகப்படுத்தி செயற்பட முடியாமை, வாகனம் செலுத்தும் போது நித்திரை தூக்கம் ஏற்படல், பகலில் முக்கியமாக பகல் உணவின் பின் நித்திரை தூக்கம் ஏற்படல்.

இவ்வாறு குணங்குறி உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகவும்.

"சாரதிக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டதால் மஹகல்வவவில் மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியது.

தனமல்விலவில் இருந்து சூரியவெவ திசையில் பயணித்த கார் சாரதியின் நித்திரைத் தூக்கத்தினால் சூரியவெவ மஹகல்வவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அதிகாலை விபத்துக்குள்ளாகியது.

தனமல்விலவை சேர்ந்த நபர் ஒருவர் சூரியவெவ மீஹகபுரவில் மரண வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்ற போது அவருக்கு நித்திரைத் தூக்கம் ஏற்பட்டதால், கார் வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியது. விபத்தில் சாரதிக்கு காயம் ஏற்படாத போதும் காருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் தினமும் விபத்துகள் இடம்பெறுவதாகவும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்".

"காரும் முச்சக்கர வண்டியும் மோதிய விபத்தில் தகப்பனும் மகளும் உயிரிழப்பு. காருடன் மோதிய விபத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு பலத்த காயம். கார் சாரதிக்கு நித்திரைத் தூக்கம் ஏற்பட்டதால் கார் வீதியின் வலது பக்கத்திற்கு இழுபட்டு சென்று சரியான திசையில் எதிர்ப்பக்கத்தில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது".

இவையெல்லாம் சமீப தினங்களாக நாம் பத்திரிகையில் பார்த்த விபத்துச் செய்திகளாகும். இவ்வாறான விபத்துகள் இனிமேலும் நாட்டில் தொடராதவாறு அவதானமாக செயற்படுதல் சாரதிகளின் பொறுப்பாகும்.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம்,
போக்குவரத்து இராஜாங்க அமைச்சு