பிறந்து 28 நாட்களில் குழந்தைகளை தாக்கும் 'Mis- N' நோய்த்தொற்று

சிறுவர்களில் கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்படுகின்ற Mis-C தொற்று சிறுவர்களின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை போன்றே, Mis- N என்பது பிறந்து 28நாட்களுக்குள்ளான பிள்ளைகளின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானது.

இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைநல விசேட வைத்திய நிபுணருமான விஜி திருக்குமார் தெரிவித்தார்.

இன்றைய காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கும் 'மிஸ்சி' பற்றி அறிந்து கொள்வதற்கிடையில், 'மிஸ் என்' என்ற புதியவகைத் தொற்றும்  தாக்கம் செலுத்தஆரம்பித்துள்ளதாக இறுதியாக வந்த மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி வைத்திய நிபுணருடன் கேட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் 19தொற்றுக்கு உள்ளான தாயின் தொப்புள் கொடியின் மூலமாக கடத்தப்படுகின்ற பிறபொருள் எதிரி அல்லது நிணநீர் தொழிற்பாட்டின் பிறழ்வு செயற்பாடு சிறுபிள்ளைகளின் உடலின் பல அங்கங்களில், பிறந்து 28நாட்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதன் மூலமாக பிள்ளைகளின் இதயத்தில் தாக்கம் ஏற்படுகின்றது. நுரையீரலில் சுவாசப் பிரச்சினைகள், காய்ச்சல், பாலூட்டலில் சிரமம், சிறுநீரக செயலிலப்பு, கல்லீரல் பிரச்சினைகள், பிள்ளை சோர்வாக காணப்படல், பிள்ளை மஞ்சளாகி காணப்படல் போன்றவற்றை அவதானிக்க முடிவதுடன், சிறு வீதமானவர்களில் உயிரிழப்பும் அவதானிக்கப்படுகிறது.

சிறு பிள்ளைகளில் குறிப்பாக 28நாட்களுக்கு உட்பட்டவர்களின் உடல்நிலையில் மேலதிக கவனம் எடுத்து பார்ப்பதுடன் பிள்ளைகளின் உடல் நிலையில் ஏதேனும் அசௌகரியத்தை அவதானித்தால் உடனடியாக அரச வைத்தியசாலைகளை அணுகுகின்ற வேளையில் விசேட வைத்தியர்கள் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு   சிகிச்சைகளுக்காக அணுப்பி வைப்பார்கள். இவற்றுக்கான உரிய சிகிச்சைகள் காணப்படுகின்றன. அவற்றை வைத்தியர்கள் உங்களுக்கு வழங்குவார்கள் என்று டொக்டர் விஜி திருக்குமார் மேலும் தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)