இணைய செய்தித்தளங்களை கட்டுப்படுத்த சீனா முடிவு

பட்டியல் வெளியீடு; மீறுவோர் மீது நடவடிக்கை

இணைய பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. சீன சைபர் வெளி நிர்வாகம் தற்போது சீனாவில் இயங்கும் இணைய செய்திச் சேவை வழங்குவோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 1358 இணையதளங்கள் மட்டமே செய்திகளை வெளியிடவும், பகிரவும் மறு பதிப்பாக எடுத்துக்கொள்ளவும் முடியும். மத்திய செய்திப்பிரிவுகள், கைத்தொழில் ஊடகங்கள், உள்ளூர் செய்திச்சேவை இணையதளங்கள், உள்ளூர் செய்திச் சேவைகள், அரசு தகவல் தளங்கள் என்பன இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன அரசு ஏற்கனவே இதுபோன்ற ஒரு பட்டியலை 2016 இல் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது சில மாற்றங்களுடன் இப்புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பட்டியலில் அதிக இணையதளங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. சீனாவின் உள்நாட்டு நிதி விவகாரங்களை கையாளும் இணையதளங்கள், அரசின் செய்திகளை வெளியிடும் இணைய தளங்களும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உள்ள இணையதளங்களின் செய்திகள், தகவல்களை மட்டுமே பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸீஜின்பிங், இணைய தளங்கள் சரியான முறையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதேசமயம் சீனாவின் மிக முக்கியமான தனியார் செய்தி நிறுவனமான கெய்க்ஸின் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இதன் தலைவரான ஹு ஷுலி சீன உதவி ஜனாதிபதி வாங்குய்ஷாவின் நண்பராவார்.