முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் LPL அணியாக Jaffna Kings

முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் LPL அணியாக Jaffna Kings-Jaffna Kings-First LPL Franchise to Announce Key Leadership Positions

எதிர்வரும் 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடருக்காக தமது முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் அணியாக பதிவான Jaffna Kings அணி தமது அணியின் பிரதான பதவிகள் சிலவற்றில் மேற்கொண்டுள்ள நியமனங்கள் குறித்து அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் Jaffna Kings அணியின் பணிப்பாளராக கணேசன் வாகீசன் (Ganeshan Vaheesan) நியமிக்கப்பட்டுள்ளார். ஹெரி (Harry) என்ற பெயரில் பிரசித்தி பெற்றுள்ள கணேசன் வாகீசன் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவராவார். நீண்டகால கிரிக்கெட் இரசிகராக மட்டுமல்லாது கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்த வாகீசன் UKCC 3 நிலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமாவார். கேம்பிரிட்ச்ஷயர் (Cambridgeshire) கனிஸ்ட பிராந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக திகழ்ந்த அவர் சர்வதேச தரத்திலான, அனுபவம் நிறைந்த கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமாவார். அவர் 2016 – 2019 வரை, நூறாண்டுகளுக்கு மேல் வரலாற்றினை கொண்ட, இங்கிலாந்தின் முன்னணி கிரிக்கெட் கழகமான March Town CC அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அக்கிரிக்கெட் கழகத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019ம் ஆண்டில் ' Clubman of the year' என வாகீசன் பாராட்டப்பட்டார். அவரது நிர்வாகத் திறமையும், கிரிக்கெட் பற்றிய அறிவும் கடந்த வருடம் யாழ்ப்பாணம் அணி பெற்ற வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்ததைப் போன்று, இம்முறையும் நிச்சயமாக LPL போட்டித்தொடரில் Jaffna Kings அணிக்கு பெரும் சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.        

2021 Jaffna Kings அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய, அனுபவம் நிறைந்த வீரரான திலின கண்டம்பி நியமிக்கப்பட்டுள்ளார். 2020 லங்கா பிரீமியர் லீக் ஆரம்ப தொடரில் சாம்பியனாக வெற்றி பெற்ற யாழ்ப்பாண அணியினை வழிநடாத்திய பிரதான பயிற்றுவிப்பாளராகவும் திலின கண்டம்பியே திகழ்ந்தார். இவ்வருட ஆரம்பத்தில் அவர் அபூதாபி T10 தொடரில் ' Bangla Tigers' அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

LPL இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் சாயலில் 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட SLPL  போட்டித் தொடரில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட Uva Next அணியின் தலைவராக திலின கண்டம்பியே அவ்வணியினை வழிநாடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான அவர் அக்கல்லூரியின் 13 வயதின் கீழ் அணி முதல் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி வரை அனைத்து அணியிலும் தலைவராக இருந்துள்ளார். கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக சர்;வதேச கிரிக்கெட் கவுன்சில், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் நிறுவனங்கள் பலவற்றில் பயிற்றுவிப்பு தொடர்பிலான முறையான பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்துள்ள திலின கண்டம்பி, 2016/17 வருடத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், 2017/18 காலப்பகுதியில் அக்கல்லூரி கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அதேபோன்று அவர் அண்மையில் SSC அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2000ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்குபற்றிய இலங்கை அணியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்ததும் திலின கண்டம்பிக்கே ஆகும். 

மேலும், அவர் Bloomfield Cricket Club மற்றும் Sinhalese Sports Club ஆகியவற்றின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ரி20 போட்டியில் இலங்கை தேசிய அணிக்கு அவர் தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கிரிக்கெட் வீரராகவும், பயிற்சியாளராகவும் அவர் பெற்றுள்ள அனுபவமானது Jaffna Kings அணியினை 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெற்றியினை நோக்கி வழிநடாத்துவதற்கு முக்கிய  காரணமாக அமையும்.

2020 LPL போட்டித்தொடரில் வெற்றிவாகை சூடிய யாழ்ப்பாண அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் திசர பெரேரா இம்முறையும் Jaffna Kings அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி ஆட்டக்காரரான இவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என ஆல் ரவுண்டராக, IPL, PSL, ABU DHABI T10 உட்பட உலகின் பிரதான லீக் தொடர்கள் பலவற்றில் ஆடியுள்ள அனுபவம் நிறைந்த வீரராவார். திசர பெரேரா ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய இரு வகை போட்டிகளிலும் மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றிய வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதுடன், இதுவரை உலகில் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்களாக மூன்று வீரர்களே உள்ளனர். மேலும், 2014ம் ஆண்டு இடம்பெற்ற டி-20 உலகக் கிண்ணத் தொடரில் கிண்ணத்தினை இலங்கை அணிக்கு பெற்றுக் கொடுத்த இறுதி மூன்று ஓட்டங்களையும் வேகமான நான்கு ஓட்டத்தின் மூலம் முழுமைப்படுத்திய வீரரும் திசர பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் உள்ளூர் போட்டியொன்றில் ஓவர் ஒன்றின் அனைத்து பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்களை விளாசியதுடன் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து சுவீகரித்து தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தார். 

Jaffna Kings அணியின் நிறுவன சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் ஊடக பணிப்பாளராக முன்னணி தொழில்முறை சந்தைப்படுத்துநரான சாரங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்ததுடன்  விஜய செய்திப்பத்திரிகை, சிலோன் நிவுஸ் பேப்பர்ஸ் உட்பட அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பிரதான பதவிகள் பலவற்றை வகித்துள்ளார். 2020 LPL தொடரில் அவரது பங்களிப்பானது தொடரினை கைப்பற்றிய அணிக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு வழியமைத்தது. சாரங்க விஜயரத்னவின் தொழில்முறை அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தல் ஞானத்தின் ஊடாக Jaffna Kings அணியானது, தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்கு காரணமாக அமையும்.