உலக மக்களை சமாதானமாக ஒன்றிணைக்கும் நோக்குடன் உதயமான ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் தினம் இன்று

ஐக்கிய நாடுகள் தினம் இன்று 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டது. இவற்றின் பெறுபேறாக 1919 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம் திகதி உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.

ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனை விட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாகின. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலக மகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2 ஆம் உலக மகா யுத்தமாகும்.

2 ஆம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாத வகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2 ஆம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல், பிரித்தானியப் பிரதமர் வின்சன் ​ேசர்ச்சில் ஆகியோர் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது. இதையடுத்து 1943 ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.

இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சான்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது.

இம்மாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இந்த சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திட்ட பின்பு அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனையடுத்து ஒக்டோபர் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகிறது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960 இல் 100 நாடுகளும், 1980 இம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்தன. அந்நாடுகளின் எண்ணிக்ைக பின்னர் அதிகரித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அரபி, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எஸ்ப்பானிய ஆகியவை உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிறிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவை ஆகும். எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

பொதுச் சபை (General Assabbly), பாதுகாப்புச் சபை (Security Council), பொருளாதார, சமூக சபை (Socio Economic Council), நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council), சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice), செயலகம் (The Secretariat)