நஞ்சற்ற பாரம்பரிய விவசாய திட்டத்தில் 'செழுமையான கிழக்கு' விழிப்புணர்வு

ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கிய திட்டத்தின் கீழ் எதிர்கால சமூகத்தின் நன்மை கருதி நஞ்சற்ற நாட்டை உருவாக்கும் கொள்கைக்கிணங்க, நாடளாவிய ரீதியில் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் இத்திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனைக்கமைவாக நடவடிக்ைககள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் 'செழுமையான கிழக்கு' எனும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் கடந்த இரண்டு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி பாவனையிலிருந்து விவசாயிகளை விடுவித்து அவர்களை பாரம்பரிய விவசாய செய்கையின் பால் ஈர்க்கச் செய்யும் நோக்கத்தின் கீழ் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போழுது கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்போக விவசாயச் செய்கையின் போது சேதன உரம், சேதன கிருமிநாசினி பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு கமநல சேவை பிரிவுகளிலும் இத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக பெரும்போக விவசாயச் செய்கையின் போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாரம்பரிய விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கமநல சேவைப் பிரிவு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு பாலமுனை கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின் பிரதான வளவாளர்களாக பேராசிரியர் சமன் வீரக்கொடி மற்றும் சூழலியலாளர் கே.நிஹால் அகமட் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். இதன் போது நஞ்சற்ற பாரம்பரிய விவசாயம் தொடர்பான அறிவுரை, தரமான சேதன உரம் உற்பத்தி, பாரம்பரிய குறுகிய கால சேதன உர உற்பத்தி, சேதன திரவ ரீதியான கிருமிநாசினி உற்பத்தி மற்றும் பாவனை முறைமை தொடர்பாக விவசாயிகளுக்கு பூரண விளக்கம் அளித்து வருகின்றனர்.

நஞ்சற்ற நாடொன்றை உருவாக்குவதற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவதுடன் எதிர்கால பரம்பரையின் நிலைபேற்றிற்காக நஞ்சற்ற நாட்டைக் கட்டி எழுப்புவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் எமது முன்னோர் 1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்தவித இரசாயன நச்சுத்தன்மையான உரங்களையோ, களைநாசினிகளையோ, பூச்சி பீடைநாசினிகளையோ பயன்படுத்தாது இயற்கை மேல் நம்பிக்கை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். இயற்கையில் உள்ள பொருட்களை விவசாயத்தில் பயன்படுத்தியும், சேதன உரங்களை மாத்திரம் பயன்படுத்தியும் விவசாயத்தினை மேற்கொண்டு வந்தனர்.

அத்துடன். நச்சுத்தன்மையற்ற உணவுகளையும் மருத்துவக் குணங்கள் கொண்ட தேசிய உணவுகளையும் உற்பத்தி செய்து சுகாதாரமாக ஆரோக்கமாக நோயற்ற திடகாத்திரமான உடலுடன் வாழ்ந்து வந்தனர். இதனை நாம் அனைவரும் உணர்ந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

ஐ.ஏ.ஸிறாஜ்
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)