நவம்பர் 01 முதல் முன்கள துறைகளில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக Pfizer

நவம்பர் 01 முதல் முன்கள துறைகளில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக Pfizer-Pfizer-Vaccine-as 3rd Dose-for-For Frontline Sectors

நவம்பர் 01 இற்கு பின்னர் முன்கள துறைகளில் பணியாற்றுவோருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் 3ஆம் டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய சுகாதாரப் பிரிவினர், முப்படை, பொலிஸார், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட முன்கள ஊழியர்களுக்கு 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்காக, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முன்கள பணியாளர்களைத் தொடர்ந்து, முன்னுரிமையின் அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30-60 வயதுக்குட்பட்ட புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் கூடியவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஏனைய பிரிவினருக்கு இவ்வாறு 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பெற்றுக் கொண்ட தடுப்பூசியை கருதாது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கமைய, 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.