வவுனியா: 273 அதிபர் ஆசிரியர்கள்; 757 மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிப்பு

வவுனியா: 273 அதிபர் ஆசிரியர்கள்; 757 மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிப்பு-Vavuniya School Reopening-273 Teachers-757 Students

வவுனியா மாவட்டத்தில் 273 அதிபர், ஆசிரியர்கள் இன்று (21) கடமைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் 200 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

சிங்கள மொழி பாடசாலைகள் உள்ளடங்களாக வவுனியா மாவட்டத்தில் 108 பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் (21) மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வருகை தந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கும் வலயக் கல்வித் திணைக்களம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வவுனியா வடக்கில் 64 பாடசாலைகளில் 63 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதுடன், 285 அதிபர், ஆசிரியர்களில் 203 பேர் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். 1,821 மாணவர்களில் 573 மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து இருந்தனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளில் 35 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதுடன், 218 அதிபர், ஆசிரியர்களில் 70 அதிபர், ஆசிரியர்கள் சமூகமளித்து இருந்தனர். 2354 மாணவர்களில் 184 மாணவர்கள் பாடசாரைலக்கு சமூகமளித்து இருந்தனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 503 அதிபர், ஆசிரியர்களில் 273 அதிபர், ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதுடன், 4,175 மாணவர்களில் 758 மாணவர்கள் பாடசாலைகளுக்கு கமூகமளித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்