கடல் போக்குவரத்து இன்றி இரணைதீவு மக்கள் தவிப்பு

கடல் போக்குவரத்து இன்றி இரணைதீவு மக்கள் தவிப்பு-Iranaitivu Sea Route Difficulties

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு பகுதிக்கான கடல் போக்குவரத்துக்கு இதுவரை எந்தவிதமான விமோசனமும் கிடைக்கவில்லை என்றும் இதனால் தாங்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீண்ட கடல் கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ள இரணை தீவு பகுதியில் சுமார் இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பின்னர் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த பகுதியில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற போதும் வாழ்வாதாரத் தொழில் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு இங்கு 126இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

குறித்த தீவில் தங்களுடைய அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி மற்றும் வாழ்விட வசதிகள் என்பன பெரும் பிரச்சினையாகவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், கடல்வழிப் போக்குவரத்துக்கு இதுவரை எந்த விதமான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மீன்பிடி படங்களிலேயே தாங்கள் பயணம் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது எந்தத் தேவையாக இருந்தாலும் இரணைதீவில் இருந்து இரணைமாதா நகருக்கும் இரணைமாதா நகரிலிருந்து இரணை தீவுக்குமான போக்கு வரத்திற்கு மீன்பிடி படகுகளில் தாம் பயணம் செய்வதற்கு எரிபொருள் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அல்லது மீன்பிடி படகுகளை வாடகைக்கு அமர்த்தி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அங்கிருந்து இரவு வேளைகளில் ஒரு மருத்துவ உதவியாக இருந்தாலும் சரி ஏனைய நேரங்களில் ஒரு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் இருந்தாலும் சரி மீன்பிடி படகுகளின் மூலம் பயணிக்க வேண்டி இருப்பதாகவும் இந்த பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . எனவே தங்களுடைய தீவுக்கான ஒரு படகுச் சேவையை ஏற்படுத்தி தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் இன்று வரை குறித்த வசதி செய்யப்படவில்லை என்றும் குறித்த தீவுப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

(பரந்தன் குறூப் நிருபர்)