புதிய அரசியலமைப்புக்கான நம்பிக்கை தரும் நகர்வுகள்

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினதும் இறைமை, ஒருமைப்பாட்டின் காவலனாக இருப்பதும், அந்நாடுகளின் சட்டம் ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்பட வழிவகுப்பதும் அரசியலமைப்பேயாகும். அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாத விடயமாக உள்ளது. அவ்வாறான யாப்புதான் நாட்டின் மறுமலர்ச்சிக்கும் நிலைபேறான துரித அபிவிருத்திக்கும் அமைதி சமாதானத்திற்கும் அடித்தளமாக அமையும்.

அந்த வகையில் இந்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது 1978 ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன இந்த யாப்பை அறிமுகப்படுத்தினார். இதுவே இந்நாட்டின் இரண்டாவது குடியரசு யாப்பாகும்.

இருந்த போதிலும் இந்த யாப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு கடந்த நான்கு தசாப்த கால வரலாறு நல்ல சாட்சியமாக விளங்குகின்றது. இந்த யாப்பில் குறைபாடுகள் இருப்பதை, அன்றைய அரசியலமைப்பு நிபுணர்களும் கலாநிதி என்.எம். பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா போன்ற முன்னணி அரசியல் தலைவர்களும் இதனை அறிமுகப்படுத்திய காலப் பகுதியிலேயே சுட்டிக்காட்டினர். இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தன அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் அவரது பத்தாண்டு பதவிக் காலப் பகுதிக்குள், அதாவது 1988 வரையான காலப் பகுதியில் மாத்திரம் இந்த யாப்பில் சுமார் 13 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நான்கு தசாப்த காலப் பகுதியில் இந்த யாப்பை அறிமுகப்படுத்திய ஜே.ஆரின் காலப்பகுதியில் தான் அதில் அதிக திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது குறைபாடுகள் கொண்ட யாப்பு என்பதை இத்திருத்தங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவை இவ்வாறிருக்க, நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறவும் இந்த யாப்பு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இனப்பிரச்சினை தீவிரமாக வளர்ச்சி பெற இந்த யாப்பு பெரிதும் பங்களித்துள்ளது என்பதுதான் அரசியல் நிபுணர்களின் கருத்தாகும். இந்நிலையில் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பின் தேவை 1995 கள் முதலே உணரப்படத் தொடங்கியது. இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2000 இல் புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இப்புதிய யாப்பை பாராளுமன்றத்தில் தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியமை தெரிந்ததே. அத்தோடு அம்முயற்சி கைவிடப்பட்டது.

பின்வந்த காலங்களிலும் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்று பிரதான அரசியல் கட்சிகளால் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும் தேர்தலின் பின்னர் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான சூழலில் 20219 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். அந்த வகையில் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, புதிய அரசியலமைப்பை உருவாக்கவென சட்டத்தரணிகளையும் கல்விமான்களையும் உள்ளடக்கி விஷேட குழுவொன்றை நியமித்தார். அக்குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வரைவைத் தயாரிக்கும் பணிகளை இக்குழுவினர் தற்போது நிறைவு செய்துள்ளனர். அந்த வரைபு சட்ட மாஅதிபர் திணைக்களத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய அரசியலமைப்புக்கான இறுதி ஆவணம் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பு வரைபு இவ்வருட இறுதிக்குள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த வரைபை 2022 ஜனவரியில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர வாய்ப்பு கிடைக்கப் பெறும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த யாப்பின் ஊடாக ஜே.ஆர். அறிமுகப்படுத்திய அரசியலமைப்பினால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு நாட்டை நிலைபேறான துரித அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லவும் இந்த யாப்பு வழிவகை செய்யும் எனவும் நம்பப்படுகின்றது. நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னினைப்படுத்தியே புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் கடந்த காலங்களைப் போலல்லாது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகப் புதிய யாப்பு அமைந்திட கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அது வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய பங்களிப்பாக அமையும்.