உலகக் கிண்ண பயிற்சி போட்டிகளில் ஆஸி., பாக். தென்னாபிரிக்கா வெற்றி

ரி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்று ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், இந்த சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று பயிற்சி ஆட்டங்களில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் வெற்றி பெற்றன.

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பல அதிரடி வீரர்களையும் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது. கிறிஸ் கெயில் 30 பந்துகளுக்கு முகம்கொடுத்த 20 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அணித்தலைவர் பாபர் அசாம் அரைச் சதம் பெற்றார்.

அதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென்னாபிரிக்க 41 ஓட்டங்களால் வென்றது. முதலில் ஆடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. அடென் மெக்ரம் 35 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களையே பெற்றது. அணித் தலைவர் முஹமது நபி 34 ஓட்டங்களை பெற்றார்.

இதனிடையே பரபரப்பாக நடந்த நியுசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியாவால் 3 விக்கெட்டுகளால் வெல்ல முடிந்தது. முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 30 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றார்.

பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலியா கடைசி ஓவர் வரை போராடி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை எட்டியது.