T20WC2021 முதல் சுற்று; SLvIRE: இலங்கை அணி இன்று அயர்லாந்துடன் இரண்டாவது போட்டியில்

- ரி20 உலகக் கிண்ணத்தை இலகு வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

இலங்கை அணி இன்று (20) அயர்லாந்துடனான தனது இரண்டாவது போட்டியில் ஆடவுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களான மஹேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்கவின் அபார பந்துவீச்சால் நமீபியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை ஏழு விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

அபுதாபியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற முதல் சுற்றுக்கான இந்தப் போட்டியில் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த நமீபிய அணி 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.

எனினும் பதிலெடுத்தாட வந்த இலங்கை அணிக்கு நமீபியா ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்தது. எனினும் அவிஷ்க பெர்னாண்டோ (30) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (42) பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 74 ஓட்டங்களை பெற்று 13.3 ஓவர்களில் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

‘இந்த தகுதிகாண் கட்டத்தை நாம் கடக்க வேண்டி உள்ளது. எல்லாம் எமக்கு சாதகமாக இருந்தது’ என்று வெற்றிக்கு பின்னர் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்தார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற தீக்ஷனவை பாராட்டிய சானக்க கூறியதாவது, ‘அவர் சிறப்பாக செயற்பட்டார். அவர் இலங்கையில் அஜந்த மெண்டிஸிடம் பயிற்சி பெற்றார். எதிர்காலத்தில் அவரிடம் மேலும் எதிர்பார்ப்புகள் உள்ளன’ என்றார்.

ஓப் ஸ்பின் பந்துவீச்சாளரான 21 வயது தீக்ஷன, தமது கரம்போல் பந்தால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்தார். இதன் மூலம் இரு ஆரம்ப வீரர்களையும் வெளியேற்றிய அவர் பின்னர் ஜான் பிரைலிங்கின் விக்கெட்டை சாய்த்தார்.

தொடர்ந்து இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில் இடது கை துடுப்பாட்ட வீரர் ராஜபக்ஷ, 18 ஓட்டங்கள் இருந்தபோது பிடியெடுப்பு ஒன்றில் இருந்து தப்பிய நிலையில் 27 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் மற்றும் இரு சிக்சர்களையும் விளாசிய நிலையில் இலங்கை அணி மீதான அழுத்தம் குறைந்தது.

அணியின் ஆரம்ப வரிசையில் உள்ள குறைபாடுகள் எஞ்சிய போட்டிகளுக்கு முன்னர் சரி செய்யப்படும் என்று ராஜபக்ஷ உறுதி செய்தார்.

‘ஆரம்ப வரிசை பற்றி நாம் சற்று கவலை அடைந்துள்ளோம். நாம் ஓட்டங்களை பெற தடுமாறும் அதேநேரம் விக்கெட்டுகளையும் இழக்கிறோம்’ என்று ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘இது எமக்கு சாதகமாக இல்லை என்றபோதும் கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு முன்னேறிச் செல்ல எதிர்பார்க்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.

நமீபியாவுடனான வெற்றியில் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றினர். வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை அணி 19.3 ஓவர்களில் நமீபியாவின் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

கிரேக் வில்லியம் 29 ஓட்டங்கள், அணித்தலைவர் கெர்ஹார்ட் 20 ஓட்டங்கள் மற்றும் ஜே.ஜே ஸ்மித் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்கள் என்று மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.

2014 ஆம் ஆண்டு ரி20 உலக சம்பியனான இலங்கை ஏ குழுவில் முதலிடம் பெற்றது.