முகமாலையில் 316 ஏக்கர் காணிகளை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை

Land Releasing-Muhamalai-Kilinochchi

கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட மேலும் 316 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார பயிர் செய்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ சார்பாக, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டுமாணத்துறை இராஜாங்க அமைச்சின் மூத்த ஆலோசனை அலுவலர் லியனகே, அமைச்சின் பணிப்பாளர் பிறேமச்சந்திரன் ஆகியோர், விடுவிக்கப்படவிருக்கும் பிரதேசத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் கள விஜயத்தினை மேற் கொண்டு Hallo Trust உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

முகமாலை பகுதியில் 316 ஏக்கர் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடு தொடர்பாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், Hallo Trust நிறுவன உயரதிகாரிகளுடன், கிராமிய வீடமைப்பு அமைச்சின் விசேட அலுவலர் லியனகே, அமைச்சின் பணிப்பாளர் பிறேமச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

(பரந்தன் குறூப் நிருபர்)