தடுப்பூசி போடாத எந்த ஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழைய முடியாது!

தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழைய முடியாது!  - கிழக்கில் 588 பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம் - ஆரம்பத்தில் முழுமையான கற்பித்தல் இல்லை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்  கிழக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப வகுப்புகளைக் கொண்ட 588 பாடசாலைகள் மட்டுமே நாளைமறுதினம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.  கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்

- கிழக்கில் 588 பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம்
- ஆரம்பத்தில் முழுமையான கற்பித்தல் இல்லை

கிழக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப வகுப்புகளைக் கொண்ட 588 பாடசாலைகள் மட்டுமே நாளைமறுதினம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை. மாறாக இம்மாகாணத்திலுள்ள வகை 3 ஐச் சேர்ந்த 346 பாடசாலைகளும், ஏனைய வகை 2 ,1சி, 1ஏபி வகை பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப பிரிவைக் கொண்ட 242 பாடசாலைகளுமாக மொத்தம் 588 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. 200 மாணவர்களை விடக் கூடுதலான மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பிரிவை உடைய பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என்றும் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

அதற்கான பூர்வாங்கஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொவிட் தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள் செய்திக் குறிப்புகள் அனைத்தும் மாகாணத்திலுள்ள சகல வலயங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளன.

கொவிட் -19 தொற்று காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை பகுதியளவில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்திருந்தது. இதற்காக கல்வியமைச்சும் சுகாதாரஅமைச்சும் இணைந்து வேலைத் திட்டங்களை வகுத்துள்ளன.

முதலிரு வாரங்களில் மாணவர்கள் சுதந்திரமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கேற்றவிதமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. கற்பித்தல் என்று பெரிதாக எதுவும் இடம்பெறாத வகையில் ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மாணவர் அனுமதிக்கப்படுவர்.

இதற்கென ஆரம்பநெறி மாணவர்களுக்கென கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 10வகையான போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. பேச்சு, கட்டுரை, சித்திரம் போன்ற 10 வகையான துறைகளில் இலகுமுறைப் போட்டிகள் முதலிரு வாரங்களில் நடத்தப்படவிருக்கின்றன. அதற்கான ஆயத்தங்களையும் இக்காலப்பகுதியில் ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும்.

அதேவேளை ,ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சியளிப்பதற்கான வளவார்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்த வாரத்தில் ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு மாணவர்களை கொவிட் நெருக்கடியிலிருந்து கற்றல் நிலைமைக்கு திருப்புவதற்கான பயிற்சி அளிப்பார்கள். ஆரம்பத்தில் அதாவது முதலிரு வாரங்களில் சீருடை அவசியமில்லை. அதேவேளை முழுமையான கற்பித்தல் நடைபெற மாட்டாது . கிழக்கில் இதுவரை 98 வீதமான அதிபர்களும் ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். எனினும் தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழைய முடியாது எனவும் கிழக்கு கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 588 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் குடிநீர் வசதி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிவதற்கு உடல் வெப்பமானியும் இதன் போது பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்படும் பாடசாலை தொடர்ந்து மூடாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பு அவசியமாகின்றது. பாடசாலையை முற்று முழுதாக சிரமதானம் செய்து சிறந்த முறையில் ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)