பொதுப் போக்குவரத்தை காலம் தாழ்த்தி ஆரம்பிப்பதே சிறந்தது

- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதை ஒத்திப் போடுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவையை ஆரம்பித்தால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அது வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் வழிமுறைகளை மீறி மக்கள் செயற்படும் விதம், மக்களின் அலட்சியப்போக்குகள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

பொது போக்குவரத்துகளில் பொதிகளை போன்று மக்களை ஏற்றிச் செல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றி அதனை நடைமுறைப்படுத்துவதே எமது தேவையாக உள்ளது. எனினும் மக்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்போது அவர்கள் செயற்படும் விதமானது வைரஸ் பரவலுக்கே வழிவகுக்கும் என்பதும் கசப்பான உண்மையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்