படிப்பினைகள் நிறைந்த நபிகளாரின் வாழ்வு

இலங்கை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் மீலாதுன் நபியை இன்று நினைவு கூருகின்றனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களது பிறந்த தினமே மீலாதுன் நபி தினமாக நினைவு கூரப்படுகின்றது. இஸ்லாமிய வருடக்கணக்கின்படி ரபிவுல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாளை முஸ்லிம்கள் இவ்வாறு நினைவு கூருவது வழமையாகும்.

இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 570 இல் மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவரது 40 வது வயதில் இறைவனின் இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறைவன் அவர் ஊடாக அருள் மறையாம் அல் குர்ஆனை உலகிற்கு அருளத் தொடங்கினான். கால, இட சூழலுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக அருளப்பட்ட குர்ஆன் 23 வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தப்பட்டது. அத்தோடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது தோழர்கள் அடங்கிய சமூகத்தினரில் இஸ்லாம் செயலுருப்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமானது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரம்பம் முதல் நற்குணம், நற்பண்புகள் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்தவராக விளங்கினார். அவர் இரக்கம், கருணை, அன்புக்கு முன்மாதிரியாக விளங்கினார். ஏழைகள் மீதும் தேவையுடையவர்கள் மீதும் அதிக கருணை காட்டிய அவர், வசதி படைத்தவர்களை வெறுக்கவோ அல்லது ஏற்ற தாழ்வு கண்கொண்டு நோக்கவோ இல்லை. மாறாக எல்லா மக்களையும் ஒரே விதமாகவே பார்த்தார்.

அவர் பிறந்து வளர்ந்த சமூகத்தில் கொலை, கொள்ளை, குடி, விபசாரம், கோத்திர பிரிவுகள் உள்ளிட்ட மனித வாழ்வுக்கு ஒவ்வாத மனித நடத்தைகள் மலிந்து காணப்பட்ட போதிலும், அவற்றிலிருந்து தூர விலகி இருந்தார். ஆனாலும் அன்றைய மக்களின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கினார். அதனால் அவர் அல் அமீன், அஸ்ஸாதிக் போன்ற பெயர்கள் கொண்டு இறைத்தூது அருளப்பட முன்னரே அழைக்கப்பட்டார்.

ஆனால் இறைத்தூது அருளப்பட ஆரம்பமானது முதல் மக்கா வாழ் மக்கள் அவர் மீது பல்வேறு விதமான இம்சைகளையும் துன்புறுத்தல்களையும் புரிந்தனர். ஒதுக்கி வைத்தனர். அவரைப் படுகொலை செய்யவும் திட்டம் தீட்டினர். என்றாலும் அவர் இவை அனைத்தின் போதும் சகிப்புத்தன்மையடனும் பொறுமையுடனும் இருந்தார். அமைதி, சமாதானம், ஒற்றுமைக்கே முன்னுரிமை அளித்தார்.

அதேநேரம் அவரது சமூகத்தினர் அவரது பாரம்பரிய பூமியிலிருந்து அவரை வெளியேற்றினர். அவரும் அவர் சார்ந்தவர்களும் மதீனாவுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். அங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும் மக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துவ ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். இதன் ஊடாக தம் பாரம்பரிய வாழிடங்களை விட்டு வந்துள்ள மக்கள் நிர்க்கதி மற்றும் கையறு நிலையை உணர்வது தவிர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அச்சமயம் மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஏனைய கோத்திர மக்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கி மதீனா சாசனத்தை ஏற்படுத்தினார். அச்சானத்தின் ஊடாக இனங்களுக்கிடையில் சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் வித்திட்டார். மேலும் ஹுதைபிய்யா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கையில், தம் தோழர்கள் எதிர்த்த விடயங்களிலும் கூட அவர் விட்டுக்கொடுப்புக்களை செய்தார். இவை வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன.

இவை மாத்திரமல்லாமல் தம் தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் மிகுந்த பக்குவத்துடனும் கண்ணியத்துடனும் நபிகளார் நடந்து கொண்டுள்ளார். குறிப்பாக தொற்று நோய் காலப்பகுதியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூட அன்னார் வழிகாட்டல்களை வழங்கியுளன்ளார்.

இவ்வாறு மனிதனின் தனிப்பட்ட வாழ்வுக்கும் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் பரந்தடிப்படையில் வழிகாட்டல்களை வழங்கியுள்ள முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும் உலக அமைதி சமாதானத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அதனால் நபிகளார் தொடர்பில் போதிய தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்படுவது பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும்.

இதேவேளை நபிகளாரின் பிறந்த தினம் இந்நாட்டில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தற்போதைய கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்குரிய அமைச்சரான பிரதமரின் முஸ்லிம் சமய, கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஸ் ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரியின் வேண்டுகோளுக்கு ஏற்ப நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாசல்களிலும் 'மொலீதுர் ரஸுல்' வைபவத்தை நடாத்துவதற்கும் இந்நிகழ்வில் 50 பேர் வரை கலந்து கொள்ளவும் சுகாதார சேவைகள் பணிப்பளார் நாயாகம் டொக்டர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

ஆகவே சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இவ்வைபவத்தை மேற்கொள்வதே ஆரோக்கியமானதாகும். அத்தோடு நபிகளாரின் போதனைகள், வழிகாட்டல்களில் படிப்பினைகள் பெற்றுக் கொள்வதும் காலத்திற்கு பயன்மிக்கதாகும்.