வியாழன் அருகே ஆய்வுக்கு விண்கல பயணம் ஆரம்பம்

வியாழன் கிரகத்தின் சிறுகோள்களை ஆராயும் விண்வெளிப் பணியை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து பாய்ச்சப்பட்ட லூசிஎனும் ஆய்வுக்கலம் கடந்த சனிக்கிழமை விண்வெளியை நோக்கி புறப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்காக 12 ஆண்டுகளுக்கு, 98.1 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது நாசா. இந்த கால கட்டத்தில் ஏழு ட்ராஜன் எனப்படும் சிறுகோள்களை லூசி ஆராயும்.

இந்த சிறுகோள்கள் இரண்டு குழுமங்களாகச் சூரியனை வலம் வருவதாக நாசா கூறியது. இதில் வியாழனுக்கு முன்பாக செல்லும் 2027/28 என்ற டிராஜன் கூட்டமும், பிறகு 2033 என்ற வியாழனை பின் தொடர்ந்து செல்லும் டிராஜன் கூட்டமும் ஆராயப்படவுள்ளன. 

சிறுகோள்கள், சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தின் சுவடுகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை ஆராய்வதன்வழி, சூரிய மண்டலம் எப்படி உருவானது என்றும் அதன் பரிணாமம் பற்றிய தகவல் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.