ஆப்கானில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு பாகிஸ்தானே காரணம்

ஆப்கான் மகளிர் செயற்பாட்டாளர் ஆவேசம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதரவு தரப்பு என்ற பெயரில் தலையீடுசெய்து அந்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை நசுக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாகிஸ்தான் தடுக்கப்படாவிட்டால் அது பிராந்திய சமாதானத்துக்கு மட்டுமின்றி 9/11 தாக்குதலை விட மோசமான பயங்கரவாத விளைவுகளை ஏற்படுத்துமென ஆப்கான் மகளிர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் சர்வதேச சிறுமியர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஆப்கான் சிறுமியரைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பிலான அமர்வில் கலந்துகொண்ட கலிதா நவாபி என்ற மேற்படி செயற்பாட்டாளர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததோடு ஆப்கானின் பெண்களும் சிறுமியரும் எதிர்கொண்டுவரும் மிக மோசமான சூழலுக்கு பாகிஸ்தானும் அதன் ஐ.எஸ்.ஐ. உளவுத் துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டவும் செய்தார்.

சர்வதேச சிறுமியர் தினம் ஆப்கானில் கொண்டாடப்படுவது வழக்கமென்றும் இம்முறை கொண்டாடப்படாமைக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டிய அவர், பாகிஸ்தானிய பெண்களுக்கு எல்லா உரிமைகளையும் அளிக்கும் அந்நாட்டு அரசு ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் தடுப்பதில் என்ன நியாயம் உள்ளது என்று கேள்வி எழுப்பவும் செய்தார்.

தலிபான்களிடம் நாட்டைக் கொடுத்து, பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை இருளில் தள்ளிவிட்டு நாட்டை தமது எண்ணப்படி வைத்திருக்கவே பாகிஸ்தான் முயல்கிறது என்றும் இவர் தனது உரையில் குறிப்பிட்டார்.