கம்பஹாவில் டெங்கு நுளம்பு பரவச் செய்த 13 பேருக்கு சிவப்பு அறிக்கை எச்சரிக்கை

கம்பஹாவில் டெங்கு நுளம்பு பரவச் செய்த 13 பேருக்கு சிவப்பு அறிக்கை எச்சரிக்கை-Dengu Breeding Environment-Gampaha

கம்பஹா மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் கவனயீனமாக இருந்து, தமது இருப்பிடங்களை பாரியளவில் அசுத்தமாக வைத்திருந்த 13 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டதாக, கம்பஹா சுகாதாரப் பிரிவின் நிர்வாக பொது சுகாதாரப் பரிசோதகர் சமர திவாகர தெரிவித்தார்.

கம்பஹா மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள், (08) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, டோனார் (டிரோன்) கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. இதனால், இந்த 13 நபர்களின் இருப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள குறித்த 13 நபர்களும், எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தாமல் தொடர்ந்தும் வைத்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்ட மற்றும் கொங்கிரீட் தட்டுகள் இடப்பட்ட வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கூரைகளில் டெங்கு நுளம்பு பரவும் அபாயங்கள் காணப்படுகின்றன. இந்தச் சூழலை சுத்தப்படுத்தாமல் வைத்திருந்த 13 நபர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மினுவாங்கொடை நிருபர்