சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து குறிப்பிடப்படும் ஆடற்கலை

சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து குறிப்பிடப்படும் ஆடற்கலை-Silappadikaram

தொன்மைமிகு தமிழரின் கலைச் சிறப்பை உரக்கச் சொல்லும் இலக்கியங்களுள் காலத்தால் முந்தியது சிலப்பதிகாரம்

தொன்மையான தமிழரின் கலைச் சிறப்பை உரக்கச் சொல்லும் இலக்கியங்களுள் காலத்தால் முந்தியது சிலப்பதிகாரம். சிலம்பினைக் குறியீடாகக் கொண்டு நீதி, கற்பு என்பவற்றை நிலைநிறுத்தியதனால் இது சிலப்பதிகாரம் என பெயர் பெற்றுள்ளது. நாடகக்காப்பியம் என்றும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. பிற மொழித் தழுவல் அல்லாது தமிழில் முதலில் எழுதப்பட்ட காவியம் இதுவாகும்.

பெண் என்பவள் சமுதாய வாழ்வில் பங்குகொள்ளத் தகுதி படைத்தவள் என்னும் உண்மையை உரக்கச் சொன்னது சிலப்பதிகாரம். இது பத்து காதைகளைக் கொண்ட புகார்க் காண்டமாகவும், மூன்று காதைகளைக் கொண்ட மதுரை காண்டமாகவும், ஏழு காதைகளைக் கொண்ட வஞ்சிக் காண்டமாகவும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழின் பாகுபாடுகளான வெண்பா, அகவல், கலிப்பா என்பவைகளும் இசைத்தமிழின் பாகுபாடுகளான ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துவரி முதலிய பாக்களும், நாடகத் தமிழின் பாகுபாடான உரைப்பாட்டுகளும் வந்துள்ளன. திருக்குறள், கம்பராமாயணம் போன்று மதிக்கப்பட வேண்டிய காவியம் சிலப்பதிகாரமாகும்.

சிலப்பதிகாரத்தை எழுதியது இளங்கோவடிகள். பத்தினியைத் துதித்தலையும், சில தர்மங்களை உலகிற்குப் புகட்டவும் எண்ணிய இளங்கோ அடிகள் எழுதிய நூல் சிலப்பதிகாரம் ஆகும்.

சங்ககாலம் தொட்டே ஆடல் சார்ந்த குறிப்புகளை அக்காலங்களில் எழுந்த இலக்கியங்கள் வழி காணமுடிகிறது. அதன் வழியே சிலப்பதிகாரமும் அக்காலத்தய ஆடலினை பலவாறாகப் பேசுகிறது. ஆடலின் இலக்கணங்களையும், ஆடல் மகளிர் பற்றிய செய்திகளையும் பாடல்கள் வழியாக விரிவாகப் பேசும் ஓர் அற்புதப்படைப்பாக சிலப்பதிகாரத்தை நோக்க வேண்டியுள்ளது. இதில் அரங்கேற்றுக் காதை, கடலாடு காதை, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை போன்ற காதைகளில் நடனம் பற்றிய செய்திகளைக் கண்டு கொள்ள முடிகிறது.

சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் கூறப்படும் முக்கிய பாத்திரம் ஆடற்குல மங்கை மாதவி. இவள் தன் ஐந்து வயது முதற்கொண்டு ஆடல், பாடல் என்பவற்றைக் கற்றுத்தேர்ந்து 12வது வயதில் நாட்டிய அரங்கேறியமை பற்றி சிலப்பதிகாரம் கூறி நிற்கிறது.

இதைத் தவிர ஆடலுக்குப் பக்கபலமாக இருக்கும் தண்ணுமை, மத்தளம், குழல், யாழ், பாடலாசிரியன் இலக்கணங்களையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதிலிருந்து ஆடலுக்குப் பக்கபலமாக இருந்துள்ள இசையாசிரியர்கள் பற்றிக் கண்டுகொள்ள முடிகிறது. மேலும் ஆடல் அரங்கு பற்றியும், ஆடற்கணிகைக்கு வழங்கும் தலைக்கோல் பட்டம் பற்றியும் விரிவான செய்திகளை சிலம்பு கூறுகிறது.

எட்டாவது காதையான வேனிற்காதையில் கோவலனைப் பிரிந்த மாதவி அவனைத் திரும்பி வருமாறு அழைத்துத் தன் தோழி வசந்தமாலையிடம் மடல் ஒன்றை எழுதி அனுப்புகிறாள். அவ்வேளை மாதவி ஆடிய எட்டு வகை வரிகள் பற்றிக் கோவலன் நினைவு கொள்கிறான். இச்சந்தர்ப்பத்தில் எட்டுவகையான வரிகளும் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன.

மாதவி மேற்படி எட்டுவகைக் கூத்துக்களை சூழ்நிலைக்கேற்ப ஆடினாளென அறியப்படுகிறது.

11வது காதை ஆய்ச்சியர் குரவையில் குரவைக் கூத்தினைப் பற்றி அறிய முடிகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை அடைந்த பின் கோவலன் சிலம்பினை விற்க பட்டணம் நோக்கிப் புறப்பட்டான். கோவலன் வரும்வரை கண்ணகி இடையர்குலப்பெண் மாதரியிடம் அடைக்கலமாக இருந்தாள்.

மலைவாழ் மக்கள் ஒன்றுகூடி பத்தினி தெய்வத்தையும், முருகக் கடவுளையும் வாழ்த்திப் பாடுவது குன்றக்குரவையாகும். கண்ணகி தன் கணவனோடு வானுலகு செல்வதைக் கண்ட மலைவாழ் மக்கள் குன்றின் அருகில் மரத்தின் நிழலில் பறை முழக்கி, துடிஇசைத்து, கொம்புகளும் மணிகளும் முழங்க குறிஞ்சிப்பண் பாடி குரவையாடினரென அறியமுடிகிறது. இங்கு முதலில் கண்ணகியை வாழ்த்திப் பின் முருகனை வணங்கி இறுதியில் தம் மன்னன் வாழ்த்துடன் நிறைவு செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. இருப்பினும் ஆய்ச்சியர் குரவை போன்று முறைப்படுத்தப்பட்ட ஆடல் முறையினை இங்கு அவதானிக்க இயலவில்லை. பெண்கள் வயது வரம்பின்றி பலர் சேர்ந்து ஆடியிருக்கலாம். முகபாவங்களுடனும், உடலசைவுகளுடனும், ஓரளவு தாளத்துடன் ஆடி இருக்கலாம். இங்கு குரவையானது நிலம் சார்ந்தும், மக்களினம் சார்ந்தும் ஆடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

28வது கால்கோள் காதையில் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற சமயம் நீலகிரி மலையில் தங்குகிறான். அவனை வாழ்த்த கூத்தர் வந்ததாகக் காண முடிகிறது.

இங்கு கூத்துக்கள் பாடுவோன் எனப்படும் ஆடலாசிரியனின் வழியில் கொங்கு நாட்டுக் கூத்தரும், நாட்டுக்கூத்தரும் தத்தம் மரபிற்கேற்ப முறைகளுடன் வருகை தந்து, குரவைப்பாட்டுடன் வரிப்பாடல்களைப் பாடி ஆடினர். இது மலைவாழ் மக்களின் ஒருவகைக் குழு நடனத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

தண்டை ஒலிக்கவும், கையினில் பறை முழங்கவும், சடையானது பல திக்குகளிலும்; மறுபக்கத்தில் பாதச் சிலம்பு அசையாது, தோள் வளை நடுங்காது, ஒலி எழுப்பாது, கூந்தல் அவிழாது உமையவள் இடப்பக்கம் இருக்க சிவபெருமான் ஆடியது கொடுகொட்டிச்சேதம். இதை உறையூரைச் சேர்ந்த கூத்தச் சாக்கையன் தன் உடலின் ஒரு பாதியை உமையாகவும், மறுபாதியைச் சிவனாகவும் வேடம் பூண்டு சேரன் செங்குட்டுவனும் அவனது தேவியாகிய வெண்மாலை முன் ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மேற்படி கொடுகொட்டி மாதவி தன் அரங்கப் பிரவேசத்தில் ஆடிய பதினொரு கூத்துகளில் ஒன்றாகும். இதிலிருந்து ஆடலில் மாதவி மட்டுமல்லாது சாக்கிய மரபினரும் தேர்ச்சி பெற்றிருந்தமை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

மேற்படி முறையான ஆடல்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறும் அதேவேளை, வழிபாடுகளோடும் தொடர்புடையதான ஆடல் முறைகளையும் கூறுகிறது. மதுரைக்காண்டம் 12வது காதை வேட்டுவவரியில் சாலினி ஆடல் தெய்வத்தன்மை நிறைய பெற்ற ஆடலாகக் காணப்படுகிறது. சாலினி என்ற மங்கை ஊர் நடுவில் கோயில் மண்டபத்தில் நின்றாடினாள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் கூறப்படும் ஒருவகை வெறியாட்டம் இவ்வகையானதெனக் கருத முடிகிறது. இவ்வகையான ஆடல் சிலம்பிலும் கூறப்படுவதாகத் தோன்றுகிறது.

மறவர்களின் கொற்றவை புகழ் போற்றிப் பாடியாடும் பாடலில் 'கொற்றவை வாளேந்தி அரக்கரழிய மரக்கால் மேல் நின்று கூத்தாடினாள்' எனப் புகழப்படுகிறது. இதுவும் வழிபாட்டோடு இணைந்த ஆடற் செய்தியாகவே அறியப்படுகிறது. இருப்பினும் மாதவி ஆடிய 11 கூத்துக்களில் மரக்கால் கூத்து இத்தகையதைத் தழுவி ஆடப்பட்டதாக அமைந்திருக்கலாம்.

இவ்வாறான ஆடல்களை நோக்குமிடத்து மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட ஆடல் முறைகளை சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. இலக்கணங்கள் வகுக்கப்பட்டு முறையான பயிற்சி பெற்று அரங்கில் ஆடும் முறை, மக்கள் தம் வாழ்நாளில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வகுத்து வைத்திருந்த ஆடல் முறை, சமயங்களோடு தொடர்புடைய வழிபாட்டுடனான ஆடல் முறை. இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் சிலப்பதிகாரத்தில் ஆடல்கள் கைக்கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன. இங்கு கூத்து, வரி, குரவை என்ற சொற்களைக் கொண்டு ஆடல் கையாளப்படுகின்றது. இதன் மூலம் நடிப்பும், ஆடலும் இணைந்த முறையிலேயே அக்கால ஆடலானது நிகழ்ந்திருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகின்றது. பின் வந்த காலகட்டங்களில் ஆடல் வேறாகவும், நாடகம் வேறாகவும் பிரிந்து தனித்தனி கலை வடிவங்களாக வளர்ந்துள்ளன.

வி. ஞானபாரதி
MA in Thanjavur, MFA in Eastern