மாணவர்களின் பரிதாப நிலையை அலட்சியம் செய்வது அநீதி!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களையும் மீளத்திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகள் கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும், ஏற்கனவே ஒரு தடவை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கே தற்போது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக உயர்தர பரீட்சைக்குத் தொற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் மருத்துவத் துறையினரின் ஆலோசனைக்கு அமைவாக ஏனைய மாணவர்களுக்கும் தடுப்பூசியேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படுமெனத் தெரிகின்றது.

இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கும் கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு வருவதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவேதான் அதற்கு முன்னேற்பாடாக க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட நிலையில் கிடக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதயிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக படிப்படியாக மீளத்திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவித்தல் வெளியாகியிருந்தது. எனவே அதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.

உலகப் பெருந்தொற்று படிப்படியாக வீழ்ச்சி நிலைமைக்குச் சென்றிருப்பதாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அறிக்கைகள் வெளிவருகின்றன. இலங்கையிலும் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகின்றது. இலங்கையில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகிலும் கொரோனா தொற்றில் படிப்படியான வீழ்ச்சி நிலைமையே தற்போது அவதானிக்கப்படுகின்றது.

இதற்குப் பலவிதமான காரணங்களை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள். முதலாவது காரணம் தடுப்பூசி ஆகும். உலகெங்கும் பெருமளவான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி ஏராளமானோரின் உடலில் உருவாகியுள்ளது. எனவே தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. உடலில் உருவான நோயெதிர்ப்பு சக்தி காரணமாக உயிரிழப்புகளும் அதிகளவில் குறைந்து விட்டன.

மற்றைய சில காரணங்களையும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உலக மக்களில் பெருமளவானோருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ கொரோனா தொற்று வந்து சென்று விட்டது. அவ்வாறானோருக்கு உடலில் இயற்கையாகவே கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதனால், மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட உயிரிழப்புக்கான ஆபத்து குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறானோர் கொவிட்டுக்கு எதிரான இயற்கை நிர்ப்பீடனம் பெற்றவர்களாக உள்ளனர்.

மற்றைய காரணம் மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிகரித்து வருகின்ற விழிப்புணர்வு ஆகும். முகக்கவசம், கைகளின் சுத்தம் பேணுதல், சமூக இடைவெளி பேணுதல் உட்பட ஏனைய சுகாதாரப் பழக்கவழக்கங்களை மக்களில் பெருமளவானோர் படிப்படியாக தாமாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான காரணங்கள் காரணமாக கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் படிப்படியாக வீழ்ச்சி நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் கொவிட் தொற்று உலகை விட்டு முற்றாக நீங்கி விட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது. கொவிட் தொற்று எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லையென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற போதிலும், ஆபத்து முற்றாக எம்மைக் கடந்து செல்லவில்லையென்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதேவேளை பாடசாலைகள் மீளத் தொடங்கும் சந்தர்ப்பத்தில் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கை பெற்றோரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனாலும் ஆசிரியர்களின் சில தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளன. இந்த முடிவானது மாணவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தப் போகின்றது.

எனினும் ஆசிரியர்களில் பெருமளவானோர் மேற்படி தொழிற்சங்கங்களின் விடாப்பிடித்தனமான முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், அரசின் உறுதிமொழியை ஏற்று பணியைத் தொடர வேண்டுமென்பதே ஆசிரியர்களில் பெருமளவானோரின் எண்ணமாக உள்ளது. மாணவர்களின் பரிதாப நிலையை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அலட்சியம் செய்வது நீதியானதல்ல!