சேதனப் பசளை பாவனைக்கு எதிராக விவசாயிகளை தூண்டி விடும் முயற்சி!

இலங்கையில் இரசாயன பசளைப் பாவனையை முடிவுக்குக் கொண்டு வந்து சேதனப் பசளைப் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பிரதேசங்கள் தோறும் சேதனப் பசளை தயாரிப்புக்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. விவசாயிகள் ஏராளமானோர் சேதனப் பசளை பாவனையில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை விவசாயச் செய்கையில் இரசாயனப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அதன் காரணமாகவே இலங்கையில் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பலவிதமான வியாதிகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனாலும் சேதன உரப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக இலங்கையில் தொற்றாநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகின்றது. தொற்றாநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியையும் செலவிட்டு வருகின்றது. இந்நிலையில் இரசாயனப் பசளைப் பாவனையை முடிவுக்குக் கொண்டு வந்து சேதனப் பசளைப் பாவனையை விவசாயத்தில் ஊக்குவிப்பதற்கான முயற்சியில் இன்றைய அரசாங்கமே முதன் முதலில் இறங்கியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான முயற்சியை முதன் முதலில் மேற்கொண்டார். நாட்டில் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற கொடிய தொற்றாநோய்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் விவசாயச் செய்கையில் கொடிய இரசாயனப் பாவனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதே ஜனாதிபதியின் திட்டமாகும். இரசாயனப் பதார்த்தங்கள் கொண்ட உணவுப் பாவனை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்லுமானால் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுமென்பதே ஜனாதிபதியின் எண்ணமாகும்.

இத்திட்டத்திற்கமைய சேதனப் பசளைத் தயாரிப்பு நிலையங்கள் நாடெங்கும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் சேதனப் பசளை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் சேதனப் பசளைத் தயாரிப்பை தொழில் ரீதியாக மேற்கொள்வதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எமது நாடு முன்னொரு காலத்தில் நெற்செய்கையில் தன்னிறைவு கொண்ட நாடாக விளங்கியது. இயற்கைப் பசளையைப் பயன்படுத்தியே எமது முன்னோர்கள் விவசாயச் செய்கையை மேற்கொண்டு வந்தனர். அதன் காரணமாக அக்காலத்தில் தொற்றாநோய்களும் மக்கள் மத்தியில் காணப்படவில்லை. விவசாயச் செய்கையில் இரசாயனப் பசளைகள் பாவனைக்கு வரத் தொடங்கியதும், மக்கள் மத்தியில் கொடிய நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. அதாவது நம் உணவே நமக்கு விஷமாகிப் போனது.

நாம் இவ்வாறு தொடர்ந்தும் இரசாயனப் பசளைப் பாவனைக்கு இடமளிப்போமானால் கொடிய நோய்களும் பெருகிக் கொண்டே செல்வதைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். நச்சுத் தன்மை கொண்ட உரங்களின் பாவனையை நிறுத்தி, இயற்கைப் பசளைக்குத் திரும்பாமல் விடுவோமானால் தொற்றாநோய்கள் மக்களை முழுமையாகவே ஆட்கொண்டு விடுமென்பதே உண்மை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இரசாயன உரப் பாவனைக்குப் பதிலாக சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை ஒரு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பின் பின்னணியில் அரசுக்கு விரோதமான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் செயற்படுவது தெரியவந்துள்ளது. இரசாயனப் பசளை பாவனை குறைப்பு திட்டத்துக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.

கொடிய நச்சுப் பதார்த்தங்கள் நிறைந்த இரசாயனப் பசளைகளால் மக்களுக்கு ஆபத்தான வியாதிகள் தோன்றுகின்றதென்பது தெரிந்திருந்த போதிலும், அது பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல் அரசியல்வாதிகள் சிலர் விவசாயிகளைத் தூண்டி விடும் செயலில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. அதாவது இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதால் விவசாயச் செய்கையே வீழ்ச்சியடைந்து விட்டதாக எதிரணி அரசியல்வாதிகள் கருத்துத் தெரவித்து வருவதையும் காண முடிகின்றது.

நாட்டு மக்களின் ஆரோக்கியம் மீது கொஞ்சமேனும் அக்கறையில்லாத விதத்தில் எதிரணி அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டு வருவது சுயநல அரசியல் என்தே உண்மை. கொடிய நச்சு இரசாயனங்களை உணவு உற்பத்தியில் பயன்படுத்த வேண்டுமென்ற கருத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டு வருவது நன்றாகவே தெரிகின்றது.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை விவசாயிகள் மத்தியில் தெளிவும், சுயசிந்தனையும் ஏற்படுவது முதலில் அவசியம் ஆகும். சேதனப் பசளைப் பாவனையென்பது ஆரம்பத்தில் சில பின்னடைவுகளைத் தரக் கூடும். ஆனால் காலப்போக்கில் அதன் அனுகூலங்களை மக்கள் அனுபவிக்க முடியுமென்பதை நினைவில் கொள்வது நன்று.