மாணவர்களின் பெற்றோர் மத்தியில் எழுகின்ற சந்தேகம்!

நாட்டில் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்னுமே முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணுமாறு கோரி, ஆசிரியர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள இப்போராட்டமானது கொவிட் பெருந்தொற்று காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கோரிக்கையானது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பல தடவை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்கங்கள் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே செல்கின்றன. கொவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன. மாணவர்கள் ‘ஒன்லைன்’ மூலமான கற்பித்தலை மாத்திரமே நம்பி இருக்கின்ற தற்போதைய சூழலில், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சம்பள விவகாரத்தைப் பொறுத்தவரை ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் உண்டென்பதை அரசாங்க தரப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக நிரந்தரத் தீர்வை காண்பதற்கான சூழல் தற்போது இல்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. அதேசமயம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான கோரிக்கைக்கு அடுத்த வருடத்திற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னரும், இப்போராட்டம் நிறுத்தப்படாமல் இருப்பது பலவிதமான சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி நிலைக்கு சென்றிருப்பதால், அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்காகவே இப்போராட்டம் தொடர்கின்றதோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் இயல்பாகவே தோன்றுகின்றது.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேற்பட்ட காலப் பகுதியில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முற்றாகவே அலட்சியம் செய்தபடியே போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தரம் 1 வகுப்புக்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்கள் பாடசாலைச் சூழலையே கண்ணில் காணாதவர்களாக இன்னும் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆரம்ப வகுப்பு மாணவர்களான சின்னஞ்சிறார்களுக்கு வகுப்பறைச் சூழல் என்பதே இல்லாமல் போயுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை ஆசிரியர்களின் நேரடிக் கற்பித்தல் இல்லாமலேயே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கடந்து சென்று விட்டனர்.

அதேசமயம் பாடசாலை ஆசிரியர்களில் ஒரு சாரார் தங்களது மாணவர்களுக்கு ‘ஒன்லைன்’ ஊடாகவேனும் கல்வி புகட்டாமல் காலம் கடத்தி வருகின்றனர். ஆனால் அந்த ஆசிரியர்களில் பலர் தங்களது டியூஷன் கற்பித்தலை இன்னுமே கைவிட்டு விடவில்லை. கொவிட் தொற்று நாட்டில் தீவிரம் அடைந்திருந்த காலப் பகுதியிலும் கூட அந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து பெருந்தொகை கட்டணத்தை அறவிட்டவாறு ‘ஒன்லைன்’ வழியாக கற்பித்து வருகின்றனர்.

பாடசாலையில் பயிலும் தங்கள் மாணவர்களுக்கு ஒன்லைன் வழியாக கற்பிக்காத ஆசிரியர்கள், டியூஷன் ஊடாக அக்கறையுடன் கற்பிப்பது பெற்றோர் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதை இங்கு கவனத்தில் கொள்வது அவசியம். பாடசாலைகள் இயங்காமல் ஆசிரியர்கள் வீட்டில் தங்கியுள்ள போதிலும், அரசாங்கம் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அவர்களுக்கான மாதாந்த சம்பளத்தை தடையின்றி வழங்கி வருகின்றது. இதனை ஆசிரிய சமூகம் நியாயமான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

சம்பள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான காலம் கொவிட் தொற்று ஓரளவு நீங்கிய பின்னரே உருவாகும் என்பதையும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் டியூஷன் ஆசிரியர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக் கல்வியை மாத்திரமே நம்பியிருக்க வேண்டியவர்களாக உள்ளனர். பெற்றோரிடம் பணவசதி இல்லாத காரணத்தினால் அம்மாணவர்கள் கல்வி வாய்ப்பையே இழந்தவர்களாக பரிதாப நிலைக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் தொடர்பாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காலப் பகுதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காக அரசுக்கு எதிரான சில சக்திகள் மறைமுக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள இந்நிலையில், ஆசிரியர் தொழிற்சங்கங்களும் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்து வருவது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அரசியல்வாதிகள் சிலரின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சில தொழிற்சங்கங்கள் ஈடுபடுவதாக மக்கள் மத்தியில் பலமான சந்தேகங்கள் உலவுகின்றன.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அநீதியானவை என்று எவருமே கூறவில்லை. ஆனால் மாணவர்களின் பரிதாப நிலையை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோளாகும்.