இலங்கை கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை - பங்களாதேஷ் அணிகள் இடையில் ரி 20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடன் 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

நேற்றுமுன்தினம் (12) அபுதாபியில் நடைபெற்றிருந்த இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சௌம்யா சர்க்கர் 34 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி, தொடக்கத்தில் தடுமாற்றம் காட்டிய போதும் அவிஷ்க பெர்னாண்டோ – சாமிக்க கருணாரட்ன ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கினர்.

தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அவிஷ்க பெர்னாண்டோ இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 42 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற, சாமிக்க கருணாரட்னவும் 29 ஓட்டங்கள் எடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் சௌம்யா சர்க்கர் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியின் வெற்றியோடு ரி 20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியினை ஆமோகமாக ஆரம்பித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தமது அடுத்த பயிற்சிப் போட்டியில் இன்று பபுவா நியூ கினியா அணியினை எதிர்கொள்கின்றது.