செளபாக்யா மூன்றாம் வார வேலைத் திட்டம் ஆரம்பம்

இந்நாட்டு மக்களில் 18 இலட்சம் மக்கள் குறைந்த வருமானமுடைய சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளாவர். அவர்களை சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானமுடையோர் என அடையாளப்படுத்தாமல் அதற்குப் பதிலாக அவர்களின் மனைப்பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. செளபாக்யா செயற்திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சமுர்த்தி மனை அபிவிருத்தி நிதி, சுயதொழில் மற்றும் வியாபார துறைகள் என்பனவற்றில் இணைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைந்த வருமானமுடைய சமுர்த்தி பயனாளிகள் இதன் மூலம் பயனடைவார்கள்.

செளபாக்யா இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 24 தொடக்கம் 3 வது செளபாக்யா வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் குறைந்த வருமானமுடையோரின் பொருளாதாரத்துறையை விருத்தி செய்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை 1800 கோடி ரூபாவாக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

செளபாக்யா வாராந்த திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 260 கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் சகல நடவடிக்கைகளும் 2021 டிசம்பர் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளது.இந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த கிராமங்களின் பாரம்பரியங்களுக்கு இணைவாக மனை அபிவிருத்தித் திட்டங்களை கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய தொழில் நுட்பத்துடனனான சந்தை வாய்ப்புக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்த வருமானமுடைய மக்கள் நீண்ட கால நிலையான வருவாயை பெற்றுக் கொள்ளக் கூடிய செளபாக்யா உற்பத்தி கிராமிய வேலைத்திட்டம் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.இந்தாண்டு இறுதிக்குள் 260 செளபாக்யா உற்பத்தி கிராமங்களின் மூலம் 200 கோடி ரூபாவை பெற்றுக் கொடுக்க 26000 குடும்பங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 20 உற்பத்திக் கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு கிராமத்திலும் 100 குடும்பங்களைச் சார்ந்தோர் பயனடைவார்கள்.ஒரு பயனாளி 1 இலட்சம் ரூபா வரைக்கும் பயனடைவார். செளபாக்யா 3 வது வாரத்தின் வேலைத்திட்டம் அனுராதபுரம் பலாகல பிரதேச செயலக பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு முருங்கைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் கறிப்பிலை மற்றும் மிளகாய் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதார் தம்பி ஆரிப்...?

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)