சீன நகர பொருளாதார வளர்ச்சி மந்த கதியில்: செய்மதி ஆய்வுகள் தகவல்

சீன நகரங்களுக்கு இடையிலான ரயில் பாதைகளில் அதிவேக புல்லட் ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அப்பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி துரிதமடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளில் மந்த கதி அவதானிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2004 ஆம் ஆண்டு முதல் 180 நகரங்களில் அமைந்துள்ள 527 ரயில் நிலையங்களை செய்மதிகள் மூலம் கணகாணிக்கப்பட்டபோது அதிவேக ரயில் சேவைகளின் பின்னர் கிழக்கு சீனாவில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியும் மத்திய சீனாவில் 3.6 சதவீதமும் வட கிழக்கு சீனாவில் 4.4 சதவீதமும் வளர்ச்சி காணப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. எனினும் இந் நகரங்களை செய்மதியூடாக ஆய்வுகளுக்கு உட்படுத்திய போது இரவுகளில் அளவுக்கு அதிகமான கருமையை அவதானிக்க முடிகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவுகளில் தொழிற்சாலைகள் இயங்காமை, வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுகின்றமை, சனநடமாட்டம் குறைதல் என்பன நகரங்களின் மின்விளக்கு பாவனையை குறைக்கும் என்ற அடிப்படையில் பொருளாதார மந்த நிலை தொடர்பாக ஆருடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிவேக ரயில்களின் வருகை ஏன் எதிர்பார்க்கப்பட்ட பலன்களைத் தரவில்லை என்பது தொடர்பாக மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.