அனைத்து மாணவரின் கற்றலுக்கும் உதவுவதற்கு அரசுடன் கைகோர்த்துள்ள டயலொக்

இலவச ‘ப்ரோட்பான்ட்’ இணைப்புக்கள்மூலம் 379 நிலையங்களில் உள்ள 10,632 மாணவர்கள் பயன்

மாணவனின் அபிவிருத்திப் பாதையில் கல்வி என்பது மிகவும் முக்கியமான அங்கம் ஆகும். கல்வி நிரலின் உள்ளடக்கமும், அவை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைமையும் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.

அண்மைய காலமாக மாணவர்கள் தங்களது கற்கை நடவடிக்கைகளை தத்தமது வீடுகளில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகின்றது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் கொவிட் பரவலானது மாணவர்களை தங்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கி விட்டது.

எனவே கல்வி கற்பிக்கப்படும் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பாடசாலை நிர்வாகிகளும் ஆசிரியர்களும் தள்ளப்பட்டனர். அதன் விளைவாகவே அண்மைக் காலமாக நாடெங்கும் கற்றல் நடவடிக்கைகள் கணினிமயமாக்கல் என்னும் புதிய பரிணாமத்துக்கூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று கணினிமயப்படுத்தப்பட்ட கல்விமுறையானது இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வாறான ஒரு காலப் பகுதியில், கணினிமயப்படுத்தப்பட்ட கல்விமுறையை எல்லா மாணவர்களும் அணுகக் கூடிய விதத்தில் அமைய வேண்டும் என்பதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

கல்விக் கட்டமைப்பில் தொழில்நுட்பம் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதும், எல்லா மாணவர்களும் இந்த வசதிகளை அணுகக் கூடிய நிலையில் இருக்கின்றார்களா என்பதனை பெற்றோர்களும் பெரியோர்களும் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, இவ்வகையான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வழிநடத்தலையும் பாதுகாப்பையும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வழங்கவும் வேண்டும்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலையீட்டின் அடிப்படையில் இது தொடர்பான பரந்தளவிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகவும் முக்கியமாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுடன் இணைந்து ‘டயலொக் அக்சியாட்டா’ நிறுவனம் அனைத்து சிறுவர் மேம்பாட்டு நிலையங்களுக்கும் இலவச ‘ப்ரோட்பான்ட்’ இணைப்புக்களை வழங்குவதற்கான முயற்சியினை மேற்கொள்வதாக அறிவித்திருந்ததைக் குறிப்பிடலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் 379 நிலையங்களில் உள்ள 10,632 மாணவர்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் இன்றைய காலப் பகுதியில் தரமான கல்வியினை கல்வி அமைச்சின் ‘இ-தக்சலாவ’ தளத்தின்மூலம் பெற்றுக் கொள்வார்கள். டயலொக் நிறுவனமானது இத்தகைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முக்கியமாக டயலொக் டிவி, டயலொக் வியு செயலி, நெனெச ஊடாடும் மொபைல் செயலி, நெனெச ஸ்மார்ட் பள்ளிகள் டிஜிட்டல் உருமாற்ற முயற்சி மற்றும் டயலொக் மெரிட் புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றின் மூலம் 2000 பாடசாலைகள் மற்றும் 1.6 மில்லியன் இல்லங்களை இணைக்கும் நெனெச டிஜிட்டல் கல்வித் தளத்தை குறிப்பிடலாம்.

மேலும், கொவிட் பரவல் தொடரும் இக்காலத்திலும் புதிய யதார்த்த நிலைமைக்கு நம்மை நாம் ஆயத்தப்படுத்தும் வேளையில், ஒவ்வொரு மாணவனும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிப்படுத்த டயலொக் நிறுவனமானது தொடர்ந்து அயராது உழைக்கும். ஒரு நாடு என்ற ரீதியில் எந்தவொரு மாணவனும் தனித்து விடப்படக் கூடாது என்பதையும், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, அது ஒவ்வொரு மாணவனினதும் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியமான அங்கம் என்பதையும் நாம் அறிந்து செயற்பட வேண்டும்.