ஜெயலலிதாவின் முதலாவது கதாநாயகன் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

ஜெயலலிதாவின் முதலாவது கதாநாயகன் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்-Tamil Actor Srikanth Dies at 82

- தமிழ் சினிமாவில் மற்றொரு இழப்பு

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று (12) காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 82 ஆகும். வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாகவே இவர் உயிரிழந்தார்.

தமிழில் 200 இற்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் அறிமுகமான 'வெண்ணிற ஆடை' படத்தில்தான் இவரும் அறிமுகமானார். இயக்குனர் ஸ்ரீதர் 1965ம் ஆண்டு இயக்கிய 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். சிவாஜி கணேஷன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்தார். வில்லன், குணசித்திரம், கதாநாயகன் உள்ளிட்ட பல ரோல்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

ராஜா வெங்கட்ராமன் என்ற தனது பெயரை, சினிமாவிற்காக ஸ்ரீகாந்த் என மாற்றிக் கொண்டவர். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில் தான் இவரும் அறிமுகமானார் என்பதால், இவர் ஜெயலலிதாவிற்கும் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.

வெண்ணிற ஆடை, நாணல், ராஜபார்ட் ரங்கதுரை, அன்புத்தங்கை, வைரம், பைரவி, தங்கப்பதக்கம், நூற்றுக்கு நூறு, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1974 ஆம் ஆண்டு வெளியான 'திக்கற்ற பார்வதி' படத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது.

ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்த், 'தங்கப்பதக்கம்' படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து மிகப் பெரிய பாராட்டை பெற்றவர். மங்கை என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.ஸ்ரீகாந்த்தின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வயதான பின்பும் 'பாரதி' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். கதாநாயகன், குணச்சித்திர வேடம், வில்லன் என பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.

'வெண்ணிற ஆடை' படத்தில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார்.