11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கரன்னாகொடவின் குற்றப்பத்திரம் வாபஸ்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கரன்னாகொடவின் குற்றப்பத்திரம் வாபஸ்-AG Tells Court that Charges Against Wasantha Karannagoda Will Not be Carried Forward

- குற்றப்பத்திரத்தை மீள பெறுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவிப்பு

11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னகர்த்தப் போவதில்லையென சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதாக, சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (13) அறிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் சட்ட மாஅதிபரின் முடிவை இரத்துசெய்யும் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி, கரன்னாகொட தாக்கல் செய்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சந்தர்ப்பத்திலேயே இது அறிவிக்கப்பட்டது.

இம்மனு விசாரணை, மேன்முறையீட்டு நீதியர்சர்களான சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகியோர் முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி அவந்தி பெரேரா இதனை அறிவித்திருந்தார்.

கடந்த ஓகஸ்ட் 04ஆம் திகதி குறித்த வழக்கு, சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதன் 14ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள  வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரப் போவதில்லை என, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார தெரிவித்திருந்தார்.

கரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு-Political Revenge Commission Order to Release Karannagoda DKP Dassanayake from Case

கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு முறையற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட கடற்படையின் 14 உறுப்பினர்கள் மீது சட்ட மாஅதிபரினால் இதற்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்ய்யபட்டிருந்தது.