பேஸ்புக் தடங்கலால் 70 மில்.பேர் டெலிகிராமில் இணைவு

பேஸ்புக்கில் உலகளாவிய சேவைத்தடை நேர்ந்தபோது சுமார் 70 மில்லியன் புதிய பயனீட்டாளர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் சேவையின் நிறுவனர் பாவெல் டுரோவ் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பல மில்லியன் பேர் ஒரே சமயத்தில் டெலிகிராமில் சேர்ந்ததால் சில பயனீட்டாளர்கள் சேவையில் தாமதத்தைச் சந்தித்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை (ஒக்டோபர் 4) நேர்ந்த சேவைத்தடையால் சுமார் ஆறு மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் 3.5 பில்லியன் பேர் வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், பேஸ்புக், மெசெஞ்சர் தளங்களைப் பயன்படுத்த முடியவில்லை.

ஒருசில பெரிய நிறுவனங்களை மட்டும் சார்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை அது உணர்த்துவதாகக் கூறப்பட்டது.

வட்ஸ்அப் செயலியின் சேவை சுமார் 6 மணி நேரத்திற்குத் தடைப்பட்டதால் பங்குச்சந்தை முதல் ரஷ்ய எண்ணெய்ச் சந்தை வரை பல துறைகள் பாதிக்கப்பட்டன.

மற்ற தகவல் பரிமாற்றத் தளங்களுக்கு மாறியதால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் தவிர்க்கப்பட்டது.