சமூக ஊடகங்களில் உலவும் ஆதாரமற்ற வீண் புரளிகள்!

உலகெங்கும் கொவிட் தொற்று பரவலும், அதனால் சம்பவிக்கின்ற உயிரிழப்புகளும் தற்போது பெருமளவில் வீழ்ச்சி நிலைமைக்கு வந்திருப்பதற்கு பிரதான காரணம் தடுப்பூசி ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளில் கொவிட் தொற்றுகின்ற வேகம் குறைந்து விட்டது. மரணங்கள் படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு செல்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் கடந்து ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக படிப்படியாக உருவாகியிருக்கும் விழிப்புணர்வும் ஒரு காரணமாகும். கொவிட் அச்சுறுத்தல் விடயத்தில் ஒரு சாரார் இன்னுமே அலட்சியமாக நடந்து கொள்கின்ற போதிலும், பெருமளவான மக்களிடம் இயல்பாகவே விழிப்புணர்வு பெருகியிருக்கின்றது. கொரோனா தொற்றுக்கு எதிரான அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களை மக்களில் பெரும்பான்மையானோர் ஓரளவாவது கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக மருத்துவ நிபுணர்கள் மற்றொரு காரணத்தையும் கூறுகின்றனர். அதாவது கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மக்களில் பலரது உடலில் உருவாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மக்கள் மத்தியில் தெரிந்தும், தெரியாமலும் ஏராளமானோருக்கு கொவிட் தொற்று வந்து சென்றிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தீவிரமான பாதிப்பு நிலைக்கு உள்ளானவர்களில் பலர் உயிரிழக்க நேரிட்டது. அவர்களில் பலர் உயிராபத்து நிலைமைக்கும் சென்று திரும்பியுள்ளனர்.

இவர்கள் தவிர, ஏராளமானோர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய போதிலும், பாரதூரமில்லாத சாதாரண குணங்குறிகளுடன் மீண்டு வந்துள்ளனர். இவர்கள் தங்களது உடலில் அதிக நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது கொரோனா வகையின் வீரியம் குறைந்த வைரஸ் தொற்று இவர்களது உடலில் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அத்தொற்றின் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதென்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இது உடலில் உருவாகின்ற இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியாகும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய கொவிட் பெருந்தொற்றைப் பொறுத்தவரை மக்களில் பலர் அவர்களை அறியாமலேயே கொவிட் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்திருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட போதிலும், நோயின் குணங்குறிகள் மிகக் குறைவானதாகவே இருந்தன. தங்களுக்கு ஏற்பட்டிருப்பது கொவிட் தொற்று என்பதைக் கூட அறியாத நிலையில் அவர்கள் தாமாகவே குணமடைந்துமுள்ளனர். அவர்களில் பலர் தங்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலை சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று கருதியிருந்தனர்.

தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பலரும் இவ்வாறு காய்ச்சல் அறிகுறிகளுடன் குணமாகியுள்ளனர். இவர்கள் விரைவாக குணமாகிக் கொண்டதற்கு தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாமென்பதே வைத்தியர்களின் கருத்தாகும். இவற்றையெல்லாம் நோக்குகின்ற போது ஒரு விடயம் எமக்குத் தெளிவாகின்றது. கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாப்புப் பெறுவதற்கு உடலில் காணப்படும் நோயெதிர்ப்பு சக்தியே அவசியமானதாகும்.

இந்த நோயெதிர்ப்பு சக்தியை நாம் பெற வேண்டுமானால் தடுப்பூசிதான் ஒரே வழியாகும். கொவிட் போன்ற கொடிய வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை நம்புவது பாதுகாப்பானதல்ல. தடுப்பூசியால்தான் அந்த வைரசுக்குரிய பாதுகாப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இன்றைய காலத்தில் மூளைக்காய்ச்சல், அம்மை நோய் போன்ற சில நோய்களுக்கான தடுப்பூசியை நாம் குழந்தைகளுக்கு பெற்றுக் கொடுக்கின்றோம். இனிவரும் காலத்தில் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியையும் இளமையிலேயே வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தடுப்பூசி தொடர்பில் மக்களில் ஒரு சாராரிடம் இன்னுமே தெளிவு ஏற்படவில்லை. சில வகை தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கு அவர்கள் தயங்குகின்றனர். தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, தாங்கள் தீர்மானித்துள்ள தடுப்பூசியையே ஏற்றிக் கொள்ள வேண்டுமென அவர்கள் பிடிவாதமாக நிற்கின்றனர். சமூகவலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் பரவுகின்ற ஆதாரமற்ற செய்திகளால் அவர்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அச்சமொன்று ஏற்பட்டுள்ளது. அதுவே இந்த தயக்கத்துக்கான காரணம் ஆகும்.

இந்தத் தயக்கம் உண்மையிலேயே அவசியமற்றதாகும். ஆதாரமற்ற வதந்திகளை நம்புவது விவேகமல்ல. அதிலும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை. அச்செய்திகளின் நோக்கம் புரளியைக் கிளப்புவது மட்டுவதேயாகும். ஆகவே கொவிட் விடயத்தில் வீணான கற்பனாவாதங்களுக்கு இடமளிக்காமல் ஒவ்வொருவரும் தாமதமின்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.