“சிறுவர்களை பாதிக்கும் பேஸ்புக்” முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

பேஸ்புக் நிறுவனத்தின் தளங்கள் மற்றும் செயலிகள், “சிறுவர்களை பாதிக்கும் வகையிலும், பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இருப்பதாக” அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

பேஸ்புக்கின் முன்னாள் உற்பத்தி முகாமையாளரான 37 வயது பிரான்சஸ் ஹாவ்கன், அந்த நிறுவனம் பற்றிய இரகசியங்களை வெளியிடுபவராகவும், கடும் விமர்சனங்களை கூறுபவராகவும் மாறியுள்ளார்.

மாபெரும் சமூக ஊடகங்களை முறைப்படுத்த, விதிகளை வகுக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பயனீட்டாளர்களின் பாதுகாப்பை விட, தனது சொந்த லாபத்தில் பேஸ்புக் எப்போதுமே கவனம் செலுத்துவதாக ஹாவ்கன் குறைகூறினார். நிறுவன ஆய்வறிக்கையின் பல்லாயிரம் பக்கங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த அவர், வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளேட்டுக்கும் அதை அளித்துள்ளார்.

பேஸ்புக்கின் சில அம்சங்கள் குழந்தைகளுக்கு அபாயம் விளைவிக்கக்கூடியவை, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடியவை என்பது நிறுவனத்துக்குத் தெரியும் என்று ஹாவ்கன் கூறினார்.

இளம் பெண்களிடையே, சீரற்ற உணவுப் பழக்கம் அதிகரிக்க சமூக ஊடகங்கள் வழியமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், பேஸ்புக் அதன் சொந்த ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க செனட் குழு ஆராயவுள்ளது.  

இந்த விசாரணைக்குப் பின்னர் பேஸ்புக் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பிரான்சஸ் ஹாவ்கன் சாட்சியமளித்த பல பிரச்சினைகளின் குணாதிசயத்துடன் உடன்படவில்லை என பேஸ்புக் கூறியது. ஆனால் “இணையத்திற்கான நிலையான விதிகளை உருவாக்க ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது” என்பதை அது ஒப்புக்கொண்டது.