லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த கைதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவு

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த கைதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவு-SC Instructed AG to Provice Adequate Security to 8 Tamil Prisoners

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ள எட்டு கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்குவதற்கான ஆலோசனையை வழங்குமாறு சட்ட மாஅதிபருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெனாண்டோ, எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று (05) பரிசீலிக்கப்பட்டபோது, நீதிமன்றம் இதனை அறிவித்தது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்டோருக்கே உரிய ஆலோசனையை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளினால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி, லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளையில், மனுதாரர்களான பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 கைதிகள், தமக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனு தொடர்பிலான எழுத்துமூல ஆட்சேபணையை எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மாஅதிபர் உள்ளிட்ட பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், மனுக்களின் பரிசீலனையை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நீதியமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஆர். அஜித் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனு, (SCFR 297/2021) கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மோகன் பாலேந்திராவினால் தாக்கல் செய்யப்பட்டதுடன், மனுதாரர்கள் சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கே. சஜந்தன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.